அயப்பாக்கத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக டென்ட் கொட்டகைகளில் வாழ்க்கை: அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகே அயப்பாக்கத்தில் கோயில் நிலத்தில் கொட்டகைகள் அமைத்து  பாதுகாப்பற்ற சூழலில்  வசித்தும்  பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்கள்.
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகே அயப்பாக்கத்தில் கோயில் நிலத்தில் கொட்டகைகள் அமைத்து பாதுகாப்பற்ற சூழலில் வசித்தும் பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்கள்.
Updated on
1 min read

திருவேற்காடு அருகே அயப்பாக்கத்தில் டெண்ட் கொட்டகைகளில் வசிக்கும் 10 பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்கள், இலவச வீட்டுமனை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக ஏங்குகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகே அயப்பாக்கத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக டென்ட் கொட்டகைகளில் 10 பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்கள் வசிக்கின்றன. கோயில் நிலத்தில் வசித்து வரும் இக்குடும்பங்கள், நிரந்தரமாக வசிக்க ஏதுவான இலவச வீட்டுமனை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, பூம்பூம் மாட்டுக்காரர்களான முனுசாமி, காளிதாஸ் உள்ளிட்டோர் தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் - அயப்பாக்கம், திருவேற்காடு சாலையை ஒட்டியுள்ள காயத்ரி நகரில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 15 குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 35-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம்.

பஜனை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தார்ப்பாய் மற்றும் பேனர்களால் ஆன 5 டென்ட் கொட்டகைகளை அமைத்து வசித்து வரும் நாங்கள், எங்கள் தொழிலுக்காக 10 மாடுகள், 20 கன்றுகுட்டிகளையும் வைத்து பராமரித்து வருகிறோம்.

நாள்தோறும் பூம்பூம் மாடுகளுடன் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளுக்குச் சென்று, நாள் ஒன்றுக்கு பொதுமக்களிடம் இருந்து, ரூ.300 முதல் 400 வரை யாசகமாகப் பெறுவோம். அவ்வாறு பெறும் தொகையால்தான் எங்கள் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து வந்தோம்.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பூம்பூம்மாடுகளுடன் வெளியே செல்ல முடியவில்லை. இதனால், எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், பஜனை கோயிலுக்கு சொந்தமான நிலத்துக்கு சுற்றுச் சுவர் உள்ளிட்ட கட்டுமான பணிகள் மேற்கொள்ள கோயில் நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர். ஆகவே, நாங்கள் எந்த நேரமும் இங்கிருந்து வெளியேற்றப்படும் சூழல் உள்ளது.

நாங்கள் நிரந்தரமாக ஓர் இடத்தில் வசிக்க ஏதுவாக இலவச வீட்டுமனை வழங்கக் கோரி வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. அதுமட்டுமல்லாமல், மின்சார வசதி இல்லாமல், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளுக்கு பயந்த வண்ணம் வசித்து வரும் எங்களின் குழந்தைகள், அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். சாதி சான்றிதழ்கள் இல்லாததால், அவர்கள், அரசின் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், டென்ட் கொட்டகைகளில் வசிக்கும் நாங்கள் மழைக்காலங்களில் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகி வருகிறோம்.

இனியாவது, வருவாய்த் துறை அதிகாரிகள் எங்களுக்கு இலவச வீட்டுமனை, மின்சார வசதி, சாதி சான்றிதழ் ஆகியவற்றை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “அயப்பாக்கத்தில் வசிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை, சாதி சான்றிதழ் உள்ளிட்டவை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in