நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சென்னை காவல் ஆணையரிடம் முதல்வர் நேரில் நலம் விசாரித்தார்

நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சென்னை காவல் ஆணையரிடம் முதல்வர் நேரில் நலம் விசாரித்தார்
Updated on
1 min read

நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் 8-வது தளத்தில் தனது அறையில் பணியில் இருந்த சங்கர் ஜிவாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதல் உதவி அளித்தனர். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று, காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து சிகிச்சை குறித்து மருத்துவர்களிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.

இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் மருத்துவர் வெங்கடாசலம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதய சிகிச்சை நிபுணர் ஜி.செங்குட்டுவவேலு தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காவல் ஆணையருக்கு 2 இடங்களில் சிறிய அளவு அடைப்பு ஏற்பட்டதாகவும், அதற்காக ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு தினங்களில் குணமடைந்து அவர் நலமுடன் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in