

‘மாறன்’ என்ற பெயர் பொறிக்கப் பட்ட இன்னொரு சங்ககால நாணயம் கிடைக்கப் பெற்றுள் ளதாக இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத் தலைவர் இரா.கிருஷ்ண மூர்த்தி தெரிவித்துள்ளதாவது:
நான் எழுதிய ‘Sangam Age Tamil Coins’ நூலில் உள்ள சில நாணயங்களின் புகைப்படங்களை தந்து உதவுமாறு ஜெர்மனி நாணய வியல் அறிஞர் ஒருவர் சமீபத்தில் கேட்டிருந்தார். அவருக்கு உதவும் வகையில் நாணயங்களை ஆய்வு செய்தபோது, மதுரையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு சேகரித்த சங்ககால பாண்டியர் நாணயங்கள் கிடைத்தன. அவற்றை சுத்தம் செய்து பார்க்கும்போது, பல அரிய தகவல்கள் கிடைத்தன.
நாணயத்தின் முன்புறம் கீழ் பகுதியில் யானை ஒன்று வலப்பக்கம் நோக்கி நிற்கிறது. உருவம், அதன் மீது உள்ள எழுத்துகள் தேய்ந்துள்ளன. யானையின் மேல் இடப்பக்கம் ‘மா’ என்ற மவுரிய - பிராமி எழுத்தும், அதைத் தொடர்ந்து, ‘ற’, ‘ன்’ என்ற தமிழ் - பிராமி எழுத்துகளும் உள்ளன. இவற்றை சேர்த்து ‘மாறன்’ என்று படிக்க முடிகிறது.
நாணயத்தின் பின்புறம் நடுவே, வேலியிட்ட மரம் போன்ற சின்னம், அதன் வலது பக்கம் 2 மரக்கிளைகள், வலதுபக்க அடி மூலையில், 6 முகடுகள் கொண்ட மலைச்சின்னம் உள்ளன. அவற்றில் 2 முகடுகள் உள்ள பகுதி உடைந்துவிட்டதால், 4 முகடுகள் மட்டும் தெரிகின்றன. இந்த 6 வளைவு முகட்டின் மேல் ‘டவுரின்’ இலச்சினை மேல் நோக்கி சென்று, மரத்தின் உச்சிப் பகுதியைத் தொட்டு நிற்கிறது.
மரத்தின் இடப்பகுதியில் ஒரு முக்கோண எல்லைக்கோடு உள்ளது. அதன் தலைப்பகுதி சிதைந்துள்ளது. நாணயத்தின் முன் புறம் இருந்ததுபோலவே ‘மா’, ‘ற’, ‘ன்’ ஆகிய 3 எழுத்துகள் இந்த எல்லைக் கோட்டுக்குள் உள்ளன. இவை மிகத் தெளிவாக உள்ளன.
நாணயத்தில் காணப்படும் ‘மா’ எழுத்து தனித்தன்மையு டையது. இதன் காலம் கி.மு. 5-ம் நூற்றாண்டு என்று ஆராய்ச்சியா ளர்கள் கூறியுள் ளனர். இந்த நாணயம் உருவாக் கப்பட்ட முறை மிகத் தொன்மை யானது. 2 தகடு களில் தனித்தனியாக அச்சிட்டு, அச்சிடப்படாத பின் பகுதியில் ஈயத்தை உருக்கிவிட்டு, அத்த கடுகளை இணைத்துள்ளது நன்கு தெரிகிறது. இந்த முறை வளர்ச்சி யடைந்த பிறகு, நவீன அச்சுமுறை உருவானது. இந்த நாணயத்தை கொற்கைப் பாண்டியன் வெளி யிட்டிருக்கலாம். காலம் கி.மு. 4-ம் நூற்றாண்டு. ‘மாறன்’ பெயர் பொறித்த வெள்ளீய சதுர வடிவ நாணயத்தை ஏற்கெனவே வெளியிட்டுள்ளேன்.