

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பது அதிமுகவின் தேர்தல் நாடகம் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை குறித்து கடந்த டிசம்பரில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் உடனடியாக தமிழக அரசு எவ்வித மேல் முறையீட்டு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு, 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தேர்தல் நாடகத்தில் அதிமுக அரசு ஈடுபடுகிறது.
அவர்களை விடுவிக்கும் எண்ணம் இருந்திருந்தால் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து 161 சட்டவிதியின்படி தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியிருக்க வேண்டும். அந்த சட்ட விதியின்படி ஒரே நாளில் அவர்களை விடுவிக்கும் அதிகாரம் இருக்கிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே வேறுபாடு கிடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.