

மசினகுடியில் 4 பேரைக் கொன்ற ஆட்கொல்லிப் புலி டி 23யை உயிருடன் பிடித்த வனத்துறையினருக்கு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பாராட்டு தெரிவித்தார். புலியை வண்டலூரில் வைத்துப் பராமரிக்க முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் கூடலூரில் 4 பேரைக் கொன்ற ஆட்கொல்லிப் புலி டி 23யைப் பிடிக்க 22 நாட்கள் வனத்துறையினர் போராடினர். இந்நிலையில், இன்று மதியம் மாயார் வனத்தில் கூட்டுப்பாறை என்ற இடத்தில் புதிரில் பதுங்கியிருந்த புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.
முதன்முறையாக ஒரு புலி மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினரின் இந்தச் செயலை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறும்போது, ''நீலகிரி மாவட்டத்தில் 3 ஆட்கொல்லிப் புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. நான்காவதாக டி 23 புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என மக்கள் போராடினர். இந்நிலையில், புலியை சுடக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனால், புலியை உயிருடன் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் பேரில் முதன்முறையாக ஒரு புலி உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் புலிகளைப் பிடிக்க பயிற்சி பெற்ற வனத்துறை, கர்நாடக வனத்துறையினர் உட்பட 100-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் மிகுந்த சிரத்தையுடன் பணியாற்றி இதைச் சாத்தியப்படுத்தி உள்ளனர். புலியை வண்டலூரில் வைத்துப் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
கூண்டில்தான் பாமரிக்க வேண்டும்
ஓசை அமைப்பினர் நிர்வாகி காளிதாஸ் கூறும்போது, ''வனத்துறை ஊழியர்களின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கவை. நீலகிரி மாவட்டத்தில் மூன்று ஆட்கொல்லிப் புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டன. இத்தகைய புலிகளைப் பிடிப்பது சிரமம். மக்களின் நம்பிக்கையைப் பெற்று முதன்முறையாக வனத்துறையினர் இந்தப் புலியை உயிருடன் பிடித்துள்ளனர். இந்தப் புலியைக் கூண்டில் வைத்துதான் பராமரிக்க முடியும்'' என்று தெரிவித்தார்.