

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பேசும்போது, “ நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் . அதிமுகவிற்கு வலுவான தலைமை அமையவில்லை. பாஜகவைச் சார்ந்து இருக்கும்வரை அதன் சரிவு தொடரும்.
சசிகலா மீண்டும் அரசியலுக்கு வந்தால் அதை நாம் விமர்சிக்க முடியாது. தலைவர்களின் சமாதிக்கு சசிகலா செல்வதை யாரும் தடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முதலாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.