Last Updated : 15 Oct, 2021 05:34 PM

 

Published : 15 Oct 2021 05:34 PM
Last Updated : 15 Oct 2021 05:34 PM

திமுகவின் வாயாக இருந்து பேசுவதை நிறுத்தாவிடில் சரியான பாடம் புகட்டுவோம்: புகழேந்திக்கு புதுச்சேரி அதிமுக எச்சரிக்கை

திமுகவின் வாயாக இருந்து பேசுவதை நிறுத்திக் கொள்ளாவிடில் சரியான பாடத்தைப் புகட்டுவோம் என கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்த புகழேந்திக்கு, புதுச்சேரி அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்துப் புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று (அக். 15 ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்ற திமுக, அதிமுகவைக் குறைத்துப் பேசிவருவது கண்டிக்கத்தக்கது. சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்து உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றனவா? என்கிற விதத்தில் பேசியுள்ளார்.

1991-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியில் இருந்த திமுக முற்றிலும் முழமையாகத் தோல்வியடைந்து திமுக தலைவர் கருணாநிதி துறைமுகம் தொகுதியிலும், பரிதி இளம்வழுதி எழும்பூர் தொகுதியிலும் மட்டும் வெற்றி பெற்றதை மறந்துவிட்டு திமுக இன்று வீண் ஆர்ப்பாட்ட அரசியலை நடத்துகிறது.

தற்போது நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி நிர்வாகம் மூன்றிலும் என அதிகாரத்தில் உள்ள திமுகவை 2024-ல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக படுதோல்வியைச் சந்திக்கும் நிலையை நிச்சயம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும், தொண்டர்களும் நிறைவேற்றுவார்கள்.

கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்த புகழேந்தி அங்கு அதிமுகவை வீணாக்கிவிட்டு, பல்வேறு தவறுகள் செய்து, இருந்த கட்சிக்கெல்லாம் துரோகம் செய்து தற்போது தலைமறைவாக ஜெயலலிதா பெயரைச் சொல்லி தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாழ்ந்து வருகிறார்.

புதுச்சேரியில் அதிமுக வலிமையாகவும், விவேகமாகவும், சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இணை ஒருங்கிணைப்பாளரைக் கைது செய்ய வேண்டும் என கூறும் புகழேந்தி, திமுகவின் வாயாக இருந்துகொண்டு பேசுவதை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால், அவரது பாணியிலேயே அவருக்குப் புதுச்சேரி அதிமுக சரியான பாடத்தைப் புகட்டும்.''

இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x