

நாட்டில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய ஒடிசா மாநிலத்தில் உள்ள தலபிரா நிலக்கரி சுரங்கத்தில் ஆண்டுக்கு 2 கோடி டன் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக, என்எல்சி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சரிவடைந்து வந்த நாட்டின் பொருளாதார நிலைமை, தற்போது படிப்படியாக சகஜ நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், அதற்கேற்றாற்போல் மின்சக்தியின் தேவையும் அதிகரித்து வருகிறது.
இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அவற்றைச் சரிசெய்ய, என்எல்சி இந்தியா நிறுவனம் தனது நிலக்கரி சுரங்கத்தில் பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, உற்பத்தியை அதிகரிக்க வழிவகை செய்துள்ளது.
என்எல்சி இந்தியா நிறுவனம் இதுவரை பழுப்பு நிலக்கரியை மட்டும் அகழ்ந்தெடுத்து மின்சக்தி உற்பத்தி செய்து வந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு, மத்திய நிலக்கரி அமைச்சகம், ஒடிசா மாநிலம், தலபிரா பகுதியில் நிலக்கரி சுரங்கப் பகுதி-2 மற்றும் 3-ஐ அந்நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்தது. அதனைத் தொடர்ந்து, அங்கு நிலக்கரி எடுப்பதற்கான பணிகளைத் தொடங்கிய என்எல்சி, 26.04.2020 முதல் தொடர்ந்து நிலக்கரியை உற்பத்தி செய்துவருகிறது.
இந்த நிலக்கரி சுரங்கத்தில், நடப்பு ஆண்டில் 40 லட்சம் டன் வெட்டி எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் பணியாற்றுகையில், தற்போது நிலக்கரி தேவை தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைச் சரிகட்ட, நடப்பு நிதியாண்டிலேயே ஆண்டுக்கு 60 லட்சம் டன்னாக அதிகரிக்கும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அதன் அடுத்தகட்டமாக உற்பத்தியை மேலும் அதிகரித்து, நடப்பு நிதியாண்டின் நிறைவுக்குள் ஆண்டுக்கு ஒரு கோடி டன் வெட்டி எடுக்கவும், அடுத்த 2022-23ஆம் நிதியாண்டில் அதனை ஆண்டுக்கு 2 கோடி டன்னாக அதிகரிக்கவும், பல்வேறு துரிதமான நடவடிக்கைகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
நிலக்கரியில் இயங்கும் அனல்மின் நிலையங்களுக்குத் தொடர்ந்து தடங்கலின்றி மின்சக்தி தயாரிக்க எரிபொருள் வழங்கவும், நிலக்கரி சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யவும், என்எல்சி இந்தியா நிறுவனம் இப்பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசுடன் இணைந்து, என்எல்சி இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ள நெய்வேலி தமிழ்நாடு மின் நிறுவனம் என்ற கூட்டு நிறுவனத்தின் மூலம், தூத்துக்குடியில் செயல்படுத்தி வரும் அனல்மின் நிலையத்தில் மணிக்கு 10 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கரியில் இயங்கும் இந்த அனல்மின் நிலையத்துக்கு, ஒடிசா மாநிலத்தில் உள்ள இந்நிறுவனத்தின் தலபிரா சுரங்கத்திலிருந்து ரயில் மற்றும் கப்பல் மூலமாகத் தற்போது நிலக்கரி எடுத்துச் செல்லப்படுகிறது.
ஒவ்வொன்றும் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு மின் உற்பத்திப் பிரிவுகளுடன் செயல்பட்டு வரும் தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி முழுவதும் தென் மாநிலங்களுக்கு வழங்கப்படுவதுடன், அவற்றில் சுமார் 40 சதவிகித மின்சக்தியானது தமிழகத்துக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய நிலக்கரி அமைச்சகம், சமீபத்தில் 01.10.2021 அன்று, நிறைவேற்றிய சுரங்கம் மற்றும் கனிமப் பொருள்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத் திருத்தத்தின்படி, நிலக்கரி சுரங்கங்கள், அவை வழங்க வேண்டிய அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருளை வழங்கிய பின்னர், எஞ்சியிருக்கும் எரிபொருளை விற்பனை செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், என்எல்சி இந்தியா நிறுவனம், தனது மின் நிலையங்களின் தேவையைப் பூர்த்தி செய்தபின், எஞ்சி இருக்கும் நிலக்கரியை விற்பனை செய்ய அனுமதி வழங்கும்படி மத்திய நிலக்கரி அமைச்சகத்தை நாடியுள்ளது.