

நீலகிரி மாவட்டத்தில் 4 பேரைக் கொன்ற ஆட்கொல்லிப் புலி, 22 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் இன்று மதியம் பிடிக்கப்பட்டது. மசினகுடியில் புதருக்குள் பதுங்கியிருந்த டி 23 புலியை வனத்துறையினர் பிடித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தும்போது அந்தப் புலிகளுக்கு எண்கள் கொடுக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள புலிகளில் ஒன்று 13 வயதுடையை இந்த T 23 புலி. அந்தப் புலி மசினகுடியில் கெளரி என்ற பெண்ணைக் கடந்த ஆண்டு அடித்துக் கொன்றது.
பின்னர், அப்பகுதியிலிருந்து கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதிக்கு நகர்ந்த புலி, கடந்த சில மாதங்களில் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இருவரையும் அடித்துக் கொன்றது.
இதைத் தவிர அப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றது. இதற்கிடையில், ஆட்கொல்லிப் புலி மசினகுடி அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில் கால்நடை மேய்த்துக் கொண்டிருந்த பசுவன் என்பவரைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடித்துக் கொன்றது.
புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை முடிவெடுத்தது. அதனை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், புலியை சுட்டுக்கொல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
அதனையடுத்து, அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். அதனையடுத்து, அந்தப் புலி வனத்துறையினருக்குப் போக்குக் காட்டி வந்தது.
நீண்ட தேடுதலுக்குப் பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஒம்பெட்டா வனப்பகுதியில் கண்டறியப்பட்டது. இதனால், கடந்த மூன்று நாட்களாக வனத்துறையினர் மீண்டும் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். நேற்று (அக். 14) இரவு புலிக்கு இரு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், புலி அடர்ந்த புதருக்குள் பதுங்கிச் சென்றது.
இந்நிலையில், மசினகுடி அருகே புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்டறிந்தனர்.
இந்நிலையில், மசினகுடியில் இருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள புதருக்குள் டி 23 புலி பதுங்கியிருந்தது. இதையடுத்து, புதரிலிருந்து புலி வெளியே வர முயலும்போது, அதற்கு மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர். இதனால் மயக்கமடைந்த புலியை வனத்துறையினர் பிடித்தனர். பிடிக்கப்பட்ட புலியை கூண்டுக்குள் ஏற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 22 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு புலி பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.