

மர்ம நபர்களால் தாக்கப்பட்ட உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், அவரது மனைவிக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கிடவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சென்னை மண்டலம், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட சரகத்திற்குட்பட்ட மதுபான சில்லறை விற்பனைக் கடை எண் 4109-ல் விற்பனையாளர்களாகப் பணிபுரிந்து வந்த எல்.துளசிதாஸ், எம்.இராமு ஆகியோர், கடந்த 4-10-2021 அன்றிரவு பணி முடிந்து, கடையை மூடிவிட்டு வந்தபோது, மர்ம நபர்கள் இவ்விருவரையும் தாக்கினர்.
இதில், சம்பவ இடத்திலேயே எல்.துளசிதாஸ் மரணமடைந்த நிலையில், படுகாயங்களுடன் எம்.இராமு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்த எல்.துளசிதாஸ் குடும்பத்திற்குத் முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், இச்சம்பவத்திற்குக் காரணமான மர்ம நபர்களைத் துரிதமாகச் செயல்பட்டுக் கண்டுபிடிக்கவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுபோன்று, டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த எல்.துளசிதாஸ் மாற்றுத் திறனாளி பணியாளர் என்பதை அறிந்த முதல்வர், எல். துளசிதாஸ் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபாய் வழங்கிடவும், அவரது குடும்பத்தினரின் ஏழ்மை நிலையைக் கருத்தில்கொண்டு, மறைந்த எல்.துளசிதாஸ் அவர்களின் மனைவி சுமதி கல்வித் தகுதிக்கேற்றவாறு, கருணை அடிப்படையில் உரிய பணியினை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவத்தில் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எம்.இராமு அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஆணையிட்டுள்ளார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.