

கடன் நிலுவைக்காக பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரை தனியார் வங்கியினர் மீண்டும் ஒப்படைக்க வந்தபோது, அதை வாங்க விவசாயி பாலன் மறுத்து விட்டார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள சோழகன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன், தஞ்சையில் உள்ள கோடக் மஹிந்திரா என்ற தனியார் வங்கியில் கடன் பெற்று, டிராக்டர் வாங்கியிருந்தார். இந்நிலையில், கடைசி 2 தவணை நிலுவைக்காக, போலீஸார் மற்றும் தனியார் வங்கியினர், அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த பாலனைத் தாக்கி, காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றதோடு, டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.
இதைக் கண்டித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாப்பாநாடு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் 3 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒரத்தநாடு டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் மற்றும் போலீஸார், திருச்சி மாவட் டம் லால்குடியில் வைக்கப்பட்டி ருந்த டிராக்டரை நேற்று முன்தினம் இரவு மீட்டு பாப்பாநாட்டில் உள்ள ஒரு வழக்கறிஞரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, விவசாயி பாலன் வீட்டுக்கு நேற்று சென்ற வங்கி ஊழியர்கள், டிராக்டரை ஒப்படைப்ப தாகவும், கடன் நிலுவைத் தொகையை கட்ட வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அதை ஏற்க மறுத்த பாலன், இதுதொடர்பாக விவசாய சங்கங்களிடம் கலந்துபேசி, பின்னர் தனது முடிவைத் தெரிவிப்பதாகக் கூறி, அவர்களை திருப்பி அனுப்பினார்.