

அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11.00 மணிவரை இன்று முதல் இயங்க அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று சராசரியாக 1,300-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. கரோனா பரவல் குறைந்திருந்தாலும் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் அத்தியாவசியத் தொழில்கள், பொழுதுபோக்கு சார்ந்த பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அடுத்தகட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து நேற்று (அக். 13) முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், பல்வேறு தளர்வுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (அக். 14) வெளியிட்ட உத்தரவில், "பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கடைகளுக்குச் செல்வதைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் ஏற்கெனவே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11.00 மணிவரை இயங்க அனுமதிக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.