Published : 14 Oct 2021 12:47 PM
Last Updated : 14 Oct 2021 12:47 PM

பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ. 6.43 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ. 6.43 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (அக். 14) கூறியிருப்பதாவது:

"பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. தூய்மை பணியாளர்களால் வீடுகள் தோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன.

மேலும், பொது இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு திடக்கழிவுகள் சேகரிப்படுகின்றன. இந்த திடக்கழிவுகளில் குறிப்பிட்ட அளவு மக்கும் குப்பைகள் மாநகராட்சியின் மறு சுழற்சி மையங்களில் இயற்கை உரமாகவும், உயிரி எரிவாயுவாகவும் மறு சுழற்சி செய்யப்படுகிறது.

மக்காத குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு மறு சுழற்சியாளர்களிடம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள திடக்கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

மேலும், கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் நீண்ட நாட்களாக தேங்கிக்கிடக்கும் குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையை குப்பையில்லா நகரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கும் வகையில் மேற்குறிப்பிட்ட பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநகராட்சியின் ஒருசில பகுதிகளில் பொது இடங்களில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுவதாகவும், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களிலிருந்து கட்டிட கழிவுகள் பொது இடங்களிலும், சாலைகளின் ஓரங்களிலும் கொட்டப்படுவதாகவும் மாநகராட்சிக்கு பல்வேறு புகார்களின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறு குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவதால் பல்வேறு விதமான சுகாதார சீர்கேடுகளும், கட்டுமான கழிவுகளால் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டுபவர்களின் மீதும், கட்டுமான கழிவுகளை பொதுஇடங்களிலும், சாலைகளிலும் கொட்டுபவர்களின் மீதும் நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களில் குப்பைகளை எறிபவர்கள் மீதும் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன் படி கீழ்க்கண்டவாறு அபராதம் விதிக்கப்படும்.

கடந்த மூன்று நாட்களில் (11.10.2021, 12.10.2021 மற்றும் 13.10.2021) பொது இடங்களில் குப்பை கொட்டிய 507 நபர்களிடமிருந்து ரூ. 3,19,200 அபராதமும், பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டிய 123 நபர்களுக்கு ரூ. 3,24,300 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மாநகராட்சியில் பொதுஇடங்களிலும் நீர்வழித்தடங்களிலும் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x