

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவிமற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள் ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி:ஆயுதபூஜை மற்றும் விஜயதசமிநன்னாளில் தமிழக மக்களுக்குஎனது மனமார்ந்த வாழ்த்துகளைதெரிவிப்பதில் மகிழ்ச்சியடை கிறேன். ஆயுத பூஜை பண்டிகைதீயசக்தியை அழித்த நல்ல சக்தியின் வெற்றியை குறிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி கொண்டாட்டங்களில் மனித இனத்தை பேணிப்பாதுகாக்கும் துர்க்கை அன்னையைப் போற்றி பாடுகிறோம். 10-ம் நாளில் பகவான் ஸ்ரீ ராமர்மற்றும் துர்க்கையின் வெற்றியை விஜயதசமியாக நாடு முழுவதும் பல்வேறு முறைகளில் கொண் டாடுகிறோம்.
உண்மை, நன்மை மற்றும் நேர்மை ஆகிய நற்பண்புகளை நாம் நிலைநிறுத்தவும், நம் குடும்பங்களில் என்றும் காணாத வளத்தையும், வளர்ச்சியையும் காணவும் விஜயதசமி நன்னாளின் வருகை நம் வாழ்வில் புதிய ஆற்றலின் தொடக்கத்தை அறிவிக்கட்டும். இத்திருவிழா நம் மாநிலத்திலும், நாட்டிலும் அமைதி, நல்லி ணக்கம், வளம் மற்றும் நல்ல உடல் நலத்தை நல்கட்டும்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: இசை, ஞானம், அறிவு, கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றின் தெய்வமானசரஸ்வதி தேவிக்கு நன்றி செலுத்திடும் வகையில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. மேலும், நாம் செய்யும் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும்உபகரணங்களைப் போற்றி வணங்கிடும் நாளாகும். இந்த நன்னாளில் அனைத்து மக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை கூறி, நல்லறிவு, திறன், மகிழ்ச்சி மற்றும் அனைத்து வளங்களும் பெற்றிட இறை சக்தி அருள் புரியட்டும்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி: தமிழக மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்’ என்பது இயற்கை நியதி. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு நாம் செயல்பட்டால் அதர்மம் என்னும் சூழ்ச்சி அகன்று தர்மம் நிலை நாட்டப்படும்.
‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதையும், ‘உழைப்பின் மூலமே வெற்றி’ என்பதனையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட, மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: உழைப்பின் சிறப்பையும், தொழிலின் மேன்மையையும் சொல்லும் ஆயுத பூஜை மற்றும் வெற்றித் திருநாளான விஜயதசமியைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமக நிறுவனத் தலைவர் சரத்குமார்: இன்னல்களைப் போக்கும்துர்க்கா தேவியையும், பொருளாதார சிக்கல்களைத் தீர்க்க வல்ல லட்சுமி தேவியையும், அழியா செல்வமான அறிவுச் செல்வத்தை தரக்கூடிய சரஸ்வதி தேவியையும் நவராத்திரி நாட்களில் வழிபட்டு ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை திருநாள் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.
இதேபோல், பாரிவேந்தர் எம்பி,கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தி.தேவநாதன் யாதவ், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எஸ்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டோரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.