

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் தற்காலிக வெற்றி, ஜனநாயகத்தின் தற்காலிக தோல்வி என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாற்றுக் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை தள்ளுபடி செய்து, திமுகவினர் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து, முதல்வர் வீட்டின் முன் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தீக்குளித்து இறந்திருக்கிறார். திமுகவின் வெற்றியை மாநில தேர்தல் ஆணையம் வேட்புமனு தாக்கல் தொடக்கத்திலேயே எழுதத் தொடங்கிவிட்டது.
மாநில தேர்தல் ஆணையமும்,காவல் துறையும் கைகோர்த்துக் கொண்டு, திமுகவின் வெற்றிக்குஅரும்பாடுபட்டுள்ளன. இவற்றையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
வாக்குச் சாவடிகளிலும், வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் வேலை செய்யவில்லை. அதிமுக,பாஜக நிர்வாகிகள் பல இடங்களில் காரணமின்றி கைது செய்யப்பட்டனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. இவை அனைத்தையும் மீறி பாஜக, கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கும், தேர்தல் பணியாற்றியவர்களுக்கும் நன்றி. திமுகவின் இந்த தற்காலிக வெற்றி, ஜனநாயகத்துக்கு தற்காலிக தோல்வி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.