Published : 14 Oct 2021 05:55 am

Updated : 14 Oct 2021 07:18 am

 

Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 07:18 AM

மாறியுள்ள அரசியல் சூழலை சாதகமாக்கி டெண்டர் ஒதுக்கீடு விசாரணையை மீண்டும் தொடங்க முடியாது: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உயர் நீதிமன்றத்தில் பதில் மனு

ex-minister-sp-velumani

சென்னை

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சி களில் பல்வேறு பணிகளுக்கு வழங்கப்பட்ட டெண்டர்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரி அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐபிஎஸ் அதிகாரியான பொன்னி தலைமையில் குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி தாக்கல் செய்த அறிக்கையில் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய ஆரம்பகட்ட முகாந்திரம் ஏதும் இல்லை என தெரிவித்து இருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அப்போதைய அதிமுக அரசும் அந்த வழக்கை கைவிட முடிவு செய்திருந்தது.


இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த ஜூலை மாதம் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் எஸ்.பி.வேலுமணி சார்பில் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எந்த பொதுநல நோக்கமும் இல்லை. ஏற்கெனவே, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி எந்தவொரு முகாந்திரமும் இல்லை எனக்கூறி தமிழக அரசால் கைவிட முடிவு எடுக்கப்பட்ட வழக்கில், ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக தற்போது எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல.

டெண்டர் நடைமுறைகளுக்கும், எனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விட்டதால் மனுதாரர் தொடர்ந்துள்ள இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல என்பதால் அதை தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை எனக்கு அளிக்க உத்தரவிட வேண்டும். மாறியுள்ள அரசியல் சூழலை சாதகமாக்கி முடிந்துபோன டெண்டர் ஒதுக்கீடு தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்கவும் முடியாது. அதுபோல மீண்டும், மீண்டும் விசாரிக்க வேண்டும் என கோரவும் முடியாது.

அறப்போர் இயக்கம் சார்பில் மனுதாரர் சுத்தமான கரங்களுடன் இந்த வழக்கை தொடரவில்லை. எனது அரசியல் வாழ்வுக்கும், தான் சார்ந்துள்ள கட்சிக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த வழக்கு எனக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது. தற்போது நான் அமைச்சராக பதவி வகிக்கவில்லை என்பதால், இந்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எனவே அறப்போர் இயக்கம் தொடர்ந்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்த வழக்கு அக்.20 அன்று விசாரணைக்கு வரவுள்ளது.




டெண்டர் ஒதுக்கீடு விசாரணைமுன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிஎஸ்.பி.வேலுமணிSp velumaniEx minister Sp velumaniஉயர் நீதிமன்றம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x