குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் நாளை இரவு சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை

குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவுக்கு பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து வலம் வந்த பக்தர்கள்.
குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவுக்கு பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து வலம் வந்த பக்தர்கள்.
Updated on
1 min read

இந்தியாவின் சிறப்பு மிக்க திருவிழாக்களில் ஒன்றான குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு 8.30 மணிக்கு அம்மன் பல்வேறு வேடங்களில், பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி உள்பிரகார பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து காப்பு அணிந்த பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வீதிகள்தோறும் அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தசரா குழுவினர் கலைநிகழ்ச்சிகளை நடத்தி காணிக்கை வசூலித்தனர்.

கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் விழாவில் பக்தர்கள், தசரா குழுவினர் பங்கேற்க மாவட்ட நிர்வாகம்,கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறுகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி கொடியேற்றம், சூரசம்ஹாரம் மற்றும் விழாவின் 8, 9, 10, 15, 16, 17 ஆகிய தேதிகளில் பக்தர்கள் முழுமையாக அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், மற்ற விழா நாட்களில்காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை பக்தர்கள் கரோனா தடுப்புவிதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவும் அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதனால், கோயிலைச் சுற்றி முழுமையாக தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் வெப்பமானி மூலம் பரிசோதிக்கப்பட்டு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (15-ம் தேதி) இரவு நடைபெறுகிறது. இதையொட்டி காலை9.30 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு மேல் கோயில்முன்பாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் அம்மன் மகிசாசூரனை சம்ஹாரம் செய்கிறார். வழக்கமாக இந்நிகழ்ச்சி கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெறும்.இதற்கு 2-வது ஆண்டாக அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

16-ம் தேதி காலை 3 மணிக்கு மேல் உற்சவமூர்த்தி அம்மன் அபிஷேக ஆராதனைக்கு எழுந்தருளல், அபிஷேக ஆராதனைகள், மாலை 5 மணிக்கு மண்டபத்தில் இருந்து அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் ஆகியவை நடைபெறுகின்றன. வேடமணிந்த தசரா பக்தர்கள், தசரா குழுவினர் தங்கள் ஊர்களில் உள்ள கோயில்களில் காப்பு களைந்து விரதத்தை நிறைவு செய்யவேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 17-ம் தேதி பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in