

நியாய விலைக் கடைகளில் பொருட்களை பெற, கைரேகையை பதிவுசெய்வதில் முதியோர் சிரமத்தை எதிர்கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளதால், வழங்கல் துறையினர் மாற்று திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் 1,127 நியாய விலைக் கடைகள் உள்ளன.11 லட்சத்து 2,366 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.
முன்பு, ஸ்மார்ட் குடும்ப அட்டையை ஸ்கேன் செய்து பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. ரேஷன் பொருட்கள் முறைகேடாக விநியோ கிக்கப்படுவதை தடுக்கவும், ‘ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்தும்,நியாய விலைக்கடைகளில் பயோமெட்ரிக் கருவி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி, குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ஸ்மார்ட் குடும்ப அட்டையை அளித்தால், அதை ஸ்கேன் செய்து, குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் கைரேகை வைத்த பின்னரே பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஆனால், கைரேகையை பதிவு செய்வதில் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘கைரேகை பதிவு முறையால், இளைஞர்கள், நடுத்தர வயதினருக்கு பொருட்களை பெறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதேசமயம், முதியவர்களுக்கு கைரேகை சரிவர பதிவாகுவதில்லை. இதனால் அவர்களை காத்திருக்குமாறு கடை ஊழியர்கள் கூறுகின்றனர். மீண்டும் முயற்சிக்கும்போது கைரேகை பதிவாகாவிட்டால், மறுநாள் வரும்படி கூறி திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பொருட்கள் வாங்க முடியாமல் பலரும் அவதிப்படுகின்றனர். மேலும், நீண்ட நேரம் ரேஷன் கடை முன் காத்திருக்கும் நிலை உள்ளது. முன்பு குடும்ப உறுப்பினரின் செல்போனில் ஓடிபி எண் வரச்செய்து, பொருட்கள் வழங்கினர். தற்போது அதுவும் நடைமுறையில் இல்லை. அரசு இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்’’ என்றனர்.
இதுதொடர்பாக, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவகுமாரி கூறும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் கைரேகை பதிவு செய்வதில் 5 சதவீதம் பேருக்குதான் பிரச்சினை உள்ளது. கைரேகை பதிவாகாத முதியவர்கள், தங்களது ஸ்மார்ட் குடும்ப அட்டையில் உறுப்பினராக உள்ள மற்றவர்களை அனுப்பி, கைரேகை வைத்து ரேஷன் பொருட்களை பெறலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. மேலும், தொடர்புடைய முதியவர், தனக்கு பதிலாக தெரிந்த நபர் ஒருவரை பிரதிநிதியாக குறிப்பிட்டு, அவரிடம் பொருட்களை வழங்க அனுமதி அளிக்க வேண்டும். நியாய விலைக் கடைகளிலேயே இதற்கான படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து அளித்தால், வட்ட வழங்கல் அலுவலர் கள ஆய்வு நடத்திய பின்னர், அனுமதி அளிக்கப்படும். அந்த நபர் கடைக்கு வந்து ‘ஆஃப் லைன்’ முறையில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் இதுபோல படிவம் அளித்துள்ளனர்’’ என்றார்.