Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM

தங்கவேட்டைக்கு முயற்சிக்கும் தொழிலாளர்கள் தேவாலாவில் தங்கச்சுரங்கங்களால் பாதிக்கப்படும் வன விலங்குகள்: கண்காணிப்பை தீவிரப்படுத்துமா வனத்துறை?

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்து தேவாலா, நாடுகானி, கைதக்கொல்லி, பந்தலூர் வரையிலான பகுதிகளில் தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்றளவும் சிலர் மண்ணை தோண்டிக் கொண்டே இருக்கின்றனர். இக்குழிகளிலும், ஏற்கெனவே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தோண்டப்பட்ட சுரங்கக் குழிகளிலும் வன விலங்குகள் விழுந்து உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது என வன ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: நாடுகானி, தேவாலா,பந்தலூர் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளைச் சேர்ந்த சிலர், இங்கு தங்கம் இருக்கும் என்றநம்பிக்கையில் தொடர்ந்து மண்ணை தோண்டி வருகின்றனர்.இதற்காக புதிதாககுழிகள் அமைக்கின்றனர். நீள சுரங்கப்பாதையும், 100 முதல் 300 அடிக்கு கீழ் உள்ள,தங்கப்படிமங்கள் நிறைந்த பாறைகளை உடைத்து, அவற்றை மில்களில் கொடுத்து, மாவாக அரைத்து,காயவைத்து, தண்ணீரில் அலசி, பாதரசம் மூலம் தங்கத்தைப் பிரித்து எடுக்கின்றனர். இவை, உள்ளூர் நகைக் கடைகளில், அன்றைய மார்க்கெட்டை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக சுரங்கக் குழிகளில் இறங்கி, பலர் தங்களது உயிரை பணயம் வைக்கின்றனர்.

வனத்துறையினர் ரோந்து வருவது தெரிந்தால், சுரங்கக்குழிகளுக்குள் மறைந்து கொள்கின்றனர். சுரங்கக் குழிகளுக்குள் தங்கம் தேடச்சென்று வனவிலங்குகளிடம் சிக்கிக் கொண்டவர்களும் உண்டு. இந்த சுரங்கங்கள் இருப்பது சில ஏக்கர் பரப்பளவில்தான் என்றாலும், இதை முன்வைத்து நடக்கும் சர்ச்சைகளும், அதையொட்டி ஏற்படும் வில்லங்கங்களும் ஏராளம்.தங்க வேட்டைக்காகத் தோண்டப்படும் சுரங்கக் குழிகளுக்குள் தவறி விழுந்து ஏராளமான வன விலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் இந்தப் பகுதிக்கு உணவு தேடி வந்த யானைக் கூட்டத்தில் இருந்த பெண் யானைக் குட்டி, சுரங்கக் குழியில் தவறி விழுந்ததும், அதை வனத்துறையினர் மீட்டு, இரண்டு‌ நாள் போராட்டத்துக்குப் பிறகு தாய் யானையிடம் சேர்த்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இதே பகுதியில் உள்ள மற்றொரு சுரங்கக் குழிக்குள் உயிரிழந்து கிடந்த ஆண் யானையின் எலும்புக்கூட்டை வனத்துறையினர் மீட்டுள்ள சம்பவமும் அரங்கேறியுள்ளது.

தங்க மலை ரகசியம்

ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் இங்கு தங்கச் சுரங்கம் வெட்டப்பட்டது. அந்த சுரங்கங்களில் தங்கம் கிடைக்கிறா? என இன்றளவும் பொதுமக்கள் தேடுகின்றனர் என்கிறார் நீலகிரி ஆவண மைய இயக்குநர் டி.வேணுகோபால்.

இதுகுறித்து அவர் கூறும்போது ‘‘கடந்த 1831-ம் ஆண்டில்ஆங்கிலேயேர் காலத்தில், லண்டனைச் சேர்ந்த ஹூகேனின் என்பவர், மலபார் பகுதியை ஒட்டிய, நீலகிரி மாவட்டம் பந்தலூர்கிளன்ராக் பகுதியில் தங்கப் படிமங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். அதையடுத்து ‘ஆல்பாகோல்டு மைனிங் கம்பெனி’யினர், தேவாலா பகுதியை ஒட்டி, 2 சதுர கிலோமீட்டர் சுற்றளவில், சுரங்கப்பாதைகள் அமைத்தனர்.

தொடர்ந்து, 1879-ல் ‘லண்டன் ஸ்டாக் மார்க்கெட்டிங்’ நிறுவனத் தினர், அப்பகுதியில் சுரங்கம் தோண்டி, தங்கம் எடுத்தனர். இதில் வரவைவிட செலவு அதிகம் என்பதால், தங்கம் எடுக்கும் பணியை நிறுத்திவிட்டு, சொந்த நாட்டுக்கு திரும்பினர். எனினும் சுற்றுப்பகுதி மக்களின் தங்கமோகம் குறையவில்லை. தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வரும் பொதுமக்கள், தங்கச் சுரங்கங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதை அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x