வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக நாடகம்: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக நாடகம்: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு
Updated on
1 min read

தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்ற திமுக நாடகம் நடத்துவதாக எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.

அதிமுக பொன்விழா ஆண்டு குறித்த ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும், அதன்பிறகு வரும் தேர்தல்களில் படுதோல்வி அடைந்துள்ளது.

அதிமுக பலமாக உள்ளது. துணிவோடு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலை சந்திப்போம்.

கோவையில் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அதை மக்களுக்கு நினைவூட்டினாலே போதும். அறிவித்த வாக்குறுதிகளை திமுகவினர் நிறைவேற்றப்போவதில்லை. நீட் தேர்வை அவர்களால் தடுத்து நிறுத்த முடியுமா? ஆனால், மக்களை ஏமாற்ற பல்வேறு நாடகங்களை நடத்தி வருகின்றனர். அதிமுக உருவானபிறகு கடந்த 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. இதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே, யாரும் சோர்வடைய வேண்டாம். மீண்டும் வெகுண்டெழுந்து வருவோம். அடுத்து அமையப்போவது அதிமுக ஆட்சிதான். இன்னும் அதிக இடங்களில் நாம் வெற்றிபெறுவோம். பொன்விழா ஆண்டை அதிமுகவினர் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ.தாமோதரன், பிஆர்ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், அம்மன் கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி, அதிமுக கோவை தெற்கு, வடக்கு, மாநகர் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in