

ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க கோயம்பேடு சந்தை மற்றும் சில்லறை விற்பனை சந்தைகளில் நேற்று அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.
ஆயுத பூஜைக்கு ஆண்டுதோறும் கோயம்பேட்டில் சிறப்பு சந்தை திறப்பது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பரவலால் சிறப்பு சந்தை திறக்கப்படவில்லை.
இந்நிலையில் சந்தையில் உள்ள கடைக்காரர்களே பூஜைக்கு தேவையான பொரி, கரும்பு, மஞ்சள் கொத்து, பூசணிக்காய், மாவிலை தோரணம், வாழைக் கன்று, பழ வகைகள், பூக்கள் உள்ளிட்டவற்றை விற்க சந்தை நிர்வாகம் அனுமதித்திருந்தது.
மேலும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை சந்தைகளிலும் அதிக அளவில் பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
பெரும்புதூர், மறைமலை நகர், ஒரகடம், மணலி, மாதவரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களில் நேற்று ஆயுத பூஜை விழாக்களை நடத்தியதால், அவர்கள் நேற்று கோயம்பேடு சந்தைக்கு வந்து மொத்த விலையில் பூஜை பொருட்களை வாங்கிச் சென்றனர்.
சிறுசிறு நிறுவனங்களை நடத்துவோர், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரும், பொதுமக்களும் கோயம்பேடு சந்தையில் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனையில் தேங்காய் ரூ.15 முதல் ரூ.30 வரையும், 5 தென்னை ஓலை தோரணங்கள் கொண்ட கட்டு ரூ.20, ஒரு வாழை இலை ரூ.6, பூசணிக்காய் ரூ.50, மாவிலை கொத்து ரூ.20, துளசி கட்டு ரூ.20, இரு வாழைக் கன்றுகள் ரூ.50 முதல் ரூ.80, சாமந்தி, மல்லிகை, கனகாம்பரம் முழம் ரூ.30, கதம்ப பூ முழம் ரூ.40, ஒரு படி பொரி ரூ.20, உடைத்த கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பொரி ஆகியவை கொண்ட தொகுப்பு ரூ.70, நாட்டு சர்க்கரை கிலோ ரூ.120, ஆப்பிள் கிலோ ரூ.140, சாத்துக்கொடி ரூ.60, ஒரு சீப்பு வாழைப்பழம் ரூ.90, மாதுளை ரூ.130, ஒரு கரும்பு ரூ.80, கரும்பு கட்டு ரூ.350 என விற்பனை செய்யப்படுகிறது.
இன்று கூட்ட நெரிசலில் சிக்குவதை தவிர்க்கும் வகையில் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக அரும்பாக்கம், தியாகராயநகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூர், அம்பத்தூர், அடையாறு, சைதாப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று பூஜை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது.