30-க்கும் மேற்பட்டோரிடம் கைவரிசை; சென்னையில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் மோசடியில் ஈடுபட்ட தரகர் கைது: 6 கிலோ வெள்ளி, ரூ.24 லட்சம் பறிமுதல்

30-க்கும் மேற்பட்டோரிடம் கைவரிசை; சென்னையில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் மோசடியில் ஈடுபட்ட தரகர் கைது: 6 கிலோ வெள்ளி, ரூ.24 லட்சம் பறிமுதல்
Updated on
1 min read

ஆன்லைன் சூதாட்டம் மூலம் லட்சக் கணக்கில் பணம் மோசடி செய்த தரகர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ரூ.24 லட்சம், 6 கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘ஆன்லைனில் பெட்டிங்கிற்காக பணம் கட்டி சுமார் ரூ.87 லட்சத்தை இழந்து விட்டேன். எனவே, என்னை ஏமாற்றிய நபரை அடையாளம் கண்டு அவரை கைது செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, அந்த பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கேசினோ, லைவ் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் இணையதளத்தில் விளையாடுவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் கட்ட வைத்து பிறகு பெட்டிங்காக மாற்றி தொடர்ந்து விளையாட செய்து, ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாக்குவது தெரியவந்தது. இதையடுத்து கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர்தான் இதுபோன்று மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது.

இதையடுத்து மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பதுங்கி இருந்த அவரை சைபர் கிரைம் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து 193 கிராம் நகைகள், 6 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.24 லட்சத்து 68,300 ரொக்கம் மற்றும் 10 செல்போன்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணன் அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு, தனது தந்தையின் தொழிலான ஆன்லைன் சூதாட்ட புக்கிங்கை கையில் எடுத்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட பெட்டிங் மட்டுமின்றி கிரிக்கெட் போட்டி பெட்டிங்கிலும் புக்கியாக செயல்பட்டு 25 முதல் 30 பேரிடம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in