Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM

பல மாதமாக கிடப்பில் போடப்பட்ட பட்டாபிராம் ரயில்வே மேம்பால பணி: போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்

ஆவடி அருகே பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பட்டாபிராம் ரயில்வே மேம்பால பணி.

ஆவடி

ஆவடி அருகே பட்டாபிராம், சி.டி.எச். சாலையில் உள்ள ரயில்வே கடவுப்பாதையை கடந்து, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்குக்கு நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று திரும்புகின்றன. ஆகவே, இந்த கடவுப்பாதை முக்கால் மணி நேரத்துக்கு ஒருமுறைமூடப்படுவதால், கடவுப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் நூற்றுக்கணக்கில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.

இதைத் தவிர்க்கும் வகையில், கடந்த 2010-11-ம் நிதியாண்டில் பட்டாபிராம் பகுதியில் ரூ.33.48 கோடி மதிப்பில் 4 வழிச்சாலையாக ரயில்வே மேம்பாலம் அமைக்க, ரயில்வே, நெடுஞ்சாலை துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் கிடந்தஅத்திட்டம் தொடர்பாக, ரயில்வேமற்றும் நெடுஞ்சாலைத் துறையினரால் மறு ஆய்வு செய்யப்பட்டு, ரூ.52.11 கோடி மதிப்பில் 6 வழிச்சாலை மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்த பல மாதங்களாக கிடப்பில் உள்ளதால் வாகனப் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாக உள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்ததாவது: பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் பணியை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கடந்த பல மாதங்களாக எந்த பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சுமார் 6 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை தொடர்ந்து வருகிறது. ஆகவே, இனியாவது பட்டாபிராம் ரயில்வே மேம்பால பணியைமீண்டும் தொடங்கி, துரிதமாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடவுப்பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைத்தல்உள்ளிட்டவற்றுக்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணி இன்னும் முடிவடையவில்லை. அதேபோல், மேம்பாலம் அமைக்கும் பணிக்குஇடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டியுள்ளது. இப்பணிகள் முடிவுக்கு வந்த உடன், மேம்பாலம் அமைக்க தொடங்கி, 4 மாதங்களில் முடிவுக்கு வரும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x