Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM

மறு வாக்கு எண்ணிக்கையில் மாறிய முடிவு; வாக்கு எண்ணும் மையத்துக்குள் தர்ணா: ஒருவர் தற்கொலைக்கு முயற்சி

தாம்பரம்

பரங்கிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட, அகரம்தென் ஊராட்சியில், பதிவான வாக்குகள் நேற்று மதியம் எண்ணப்பட்டன. இந்த ஊராட்சியின் தலைவர் பதவிக்கு திமுகசார்பில் ‘கத்திரிக்காய்’ சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் துணைத் தலைவர் ஜெகதீஸ்வரன் என்பவருக்கும், சுயேச்சையாக ‘பைனாகுலர்’ சின்னத்தில் போட்டியிட்ட ஆதிகேசவன் என்பவருக்கும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே கடும் போட்டி நிலவியது.

கடும் போட்டி

நண்பகல் 2 மணி அளவில் இறுதிச்சுற்றில் ஜெகதீஸ்வரனை விட 390 வாக்குகள் அதிகமாக ஆதிகேசவன் பெற்றிருந்த நிலையில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதையறிந்த திமுகவின் பரங்கிமலை ஒன்றியச் செயலர் ஜெயக்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகலைச்செல்வனிடம், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்று நடத்தப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கையில், ஜெகதீஸ்வரன் 3,295 வாக்குகளும், ஆதிகேசவன் 3,218 வாக்குகளும் பெற்றுள்ளதாகவும், 77 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகதீஸ்வரன் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ஆதிகேசவனின் ஆதரவாளர்கள், வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளேயே அமர்ந்து, திடீரென தர்ணா போராட்டம் நடத்தினர். போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றனர்.

அப்போது, ஆதிகேசவனின் அண்ணன் மகன் குமார் என்பவர் வாக்கு எண்ணும் மையத்தின் மேலே ஏறி குதித்து தற்கொலை செய்ய முயன்றார். அவரை அதிவிரைவுப் படையினர் மற்றும் போலீஸார் இணைந்து மீட்டு வெளியேற்றினர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x