

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் ‘உலக கைகள்கழுவும் தினம்’ நேற்று கடைபிடிக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் ஆர்.ஜெயந்தி தலைமையில் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் ‘கைகள் சுத்தம்வேண்டும் நித்தம்’ எனும் கோட்பாட்டுடன் கைகள் கழுவுவதன் முக்கியத்துவதை அனைவரும் அறியும் வகையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும்அறியும் வகையில் கைகழுவும்முறைகள் பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. கைகள்கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி மாணவர்கள் குறுநாடகம் மற்றும் நடனம் மூலம் விளக்கினர்.
கைகள் கழுவ சோப்பு வாங்கவசதியற்ற ஏழை மக்களுக்காக பெரிய பெட்டி ஒன்றை வைத்து‘சோப்பு வங்கி’ திறக்கப்பட்டப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் நன்கொடையாக அளிக்கும் சோப்புகளை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக ஏழை மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படவுள்ளது.
நிகழ்ச்சியில் டீன் ஜெயந்தி பேசும்போது, “கைகளை முறையாக கழுவுவதன் மூலம் வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள்காமாலை, சீதபேதி, டைபாய்டு போன்ற நோய்களை 33% குறைக்க முடியும். கரோனா பரவாமல் இருக்க கைகழுவுதல் முக்கியம் ஆகும்” என்றார்.
மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் யு.சுகுணாபாய், சமூக மருத்துவத் துறை பேராசிரியர் அருண்குருகன், ஒருங்கிணைப்பு அலுவலர் ரமேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.