Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM

சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டடுக்கு சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும்: சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தகவல்

சென்னை

ரூ.5,965 கோடி செலவி்ல் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டடுக்கு சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும் என சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டில் பெரிய துறைமுகங்களுக்கு இணைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக, பிரதமர் மோடி ‘கதி சக்தி’ என்ற திட்டத்தை இன்று (நேற்று) தொடங்கி வைத்துள்ளார். சாலை, இருப்புப் பாதை, துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டம் இதுவாகும்.

140 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை துறைமுகத்தின் இணைப்புக் கட்டமைப்பு வசதிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளில் ரூ.779 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இதில், துறைமுக சாலைகள் இணைப்புத் திட்டத்துக்காக ரூ.600 கோடி, கடலோர சாலைப் போக்குவரத்து வசதிக்காக ரூ.66 கோடி, கடலோர வர்த்தக சரக்கு முனையம் அமைக்க ரூ.80 கோடி, ரயில்வே இணைப்பு பாதை திட்டத்துக்கு ரூ.16 கோடி, பயணிகள் முனையம் அமைக்க ரூ.17 கோடி உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும்.

இத்திட்டங்கள் மூலம் ரயில், சாலை மார்க்கமாக மட்டுமல்லாது கடல்சார் வர்த்தகமும் மேம்பாடு அடையும்.

சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டடுக்கு சாலைத் திட்டம் ரூ.5,965 கோடி மதிப்பில் 20.5 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இத்திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.

சரக்கு போக்குவரத்து பூங்கா

இதேபோல், திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டில் ரூ.1,045 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள பல்முனைய சரக்குப் போக்குவரத்து பூங்காவும் இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு சுனில் பாலிவால் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, சென்னைத் துறைமுக துணைத் தலைவர் எஸ்.பாலாஜி அருண் குமார் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x