

ஜெயலலிதாவுக்கு பயம் வந்துவிட்டது.அதனால்தான் தன்னை விமர்சித்தவர்களைக் கூட கூட்டணிக்கு அழைக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் வைகோ இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால், எங்களுடைய கூட்டணி வலுவான அணியாக உள்ளது. தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியின் அணியை பூஜ்யங்களின் கூட்டணி என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பூஜ்யம் தான் எல்லா கணக்குகளுக்கும் தொடக்கமாகும்.
பூஜ்யம் இந்த மண்ணிலிருந்தே உலகக்கு சென்றது. பூஜ்யம் என்று தெரிந்த பிறகும் தேமுதிக அலுவலகத்திலும், விஜயகாந்தின் இல்லத்திலும் பாஜகவினர் காத்துக் கிடந்தது ஏன்?. எங்கள் கூட்டணி வலுவான அணியாக உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் எங்களது அணியில் இணைய வேண்டும். அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கும் மீண்டும் நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்.
ஜெயலலிதா மகா தைரியமுள்ள பெண்மணி. ஆனால், இப்போதுதான் ஜெயலலிதாவுக்குப் பதட்டம் வந்திருக்கிறது. அவர்கள் ரொம்ப லேசாக நினைத்த நிலைமை மாறி மக்கள் நலக் கூட்டணி, அதுவும் விஜயகாந்துடன் கரம் கோர்த்த பிறகு தன்னை விமர்சித்தவர்களையும் கூட்டணிக்கு அழைக்கிறார்.
ஜெயலலிதா வாழ்க்கையில், தன்னை கடுமையாக விமர்சனம் செய்த பிறகு யாரையும் திரும்ப அழைப்பது கிடையாது. ஆனால், கடுமையாக விமர்சனம் செய்த சரத்குமாரை மீண்டும் அழைப்பது ஜெயலலிதாவுக்கு பயம் வந்துவிட்டதைக் காட்டுகிறது.
அதிமுக நிச்சயம் தோற்கப் போகிறது. இனி ஒவ்வொரு அதிர்ச்சிக்கும் ஜெயலலிதாவுக்கு பயம் வரும்.
தேர்தலில் அதிமுகவுக்கும், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணிக்கும்தான் போட்டி. அதிமுக என்ற கொள்ளைக் கூட்ட ஆட்சியை ஒழிப்பதே எங்கள் முதல் வேலை.
இவ்வாறு அவர் கூறினார்.