

அரசியல் கட்சியினர் தங்கள் வாகன ங்களில் கட்சிக் கொடியை கட்டியபடி வலம்வரக்கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியர் கே.வீரராகவராவ் உத்தரவிட்டார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. தேர்தல் விதிகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்து ஆட்சியர் பேசியது: சாலைகளில் உள்ள பாலங்களில் விளம்பரங்கள் செய்யக்கூடாது. கட்சி கொடிமரங்கள், சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மாவட்டத்தில் எங்கும் இருக்கக்கூடாது. மீறி அகற்றாமல் இருப்பவர்கள் மீது வழக்கு பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அன்னதானம், ரத்த தானம், விளையாட்டுப்போட்டி, பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. மின் கம்பங்கள் மீது கட்சிக் கொடிகளை கட்டவோ, சின்னங்கள் வரையவோ கூடாது.
அரசு பஸ்களில் உள்ள விளம்பரங்கள் அகற்றப்பட வேண்டும். வழிபாட்டுக் கூடங்கள் அருகே கொடி, போஸ்டர்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு கட்சி கொடி, சின்னங்கள் இருந்தால் அழிக்கப்பட வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் தொகுதி நிதியில் கட்டப்பட்ட கட்டிடங்களிலுள்ள பெயர் பலகைகளை மறைக்க வேண்டாம். கட்சியின் வண்ணம் குறிப்பிடப்பட்டிருந்தால் அகற்ற வேண்டும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி, மாநகராட்சி துணை ஆணையர் செ.சாந்தி, தொகுதி தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.