Published : 04 Mar 2016 09:43 AM
Last Updated : 04 Mar 2016 09:43 AM

ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க முடிவு: தமிழக அரசின் கடிதம் மீது உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க ஆலோசனை கோரி தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தின் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக தலைவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகள் வருமாறு:

திமுக தலைவர் கருணாநிதி:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறைவாசம் அனு பவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய முடிவெடுத்துள்ள தமிழக அரசு, இது தொடர்பாக மத்திய அரசின் ஆலோ சனையைக் கேட்டு, மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரும், ஏறத்தாழ இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். தமிழக அரசு கடந்த முறை மேற்கொண்ட தவறான அணுகுமுறையால் 7 பேரின் விடுதலை தள்ளிப்போனது. தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

ராஜிவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுவிக்க மத்திய அரசின் ஆலோசனையை தமிழக அரசு கேட்டுள்ளது. இது அரசியல் லாபம் தேடும் செயலாகும். 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த விஷயத்தில் முந்தைய காங்கிரஸ் அரசும், தற்போதைய பாஜக அரசும், இடதுசாரிகளும் ஒரே எண்ணத்தில்தான் உள்ளன. தமிழக அரசியல் களத்தில் தனக்கு எதிராக இருக்கும் தேசிய கட்சிகளை அம்பலப்படுத்தவே முதல்வர் இப்படி செய்துள்ளார். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றால், அமைச்சரவையைக் கூட்டி, அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி ஆளுநருக்கு பரிந்துரை அளிக்கலாம். ஆனால், ஏற்கெனவே முயற்சித்து தோல்வியடைந்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432-ஆவது பிரிவை பயன்படுத்தி இவர்களை விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோருவது ஏற்புடையதல்ல.

திக தலைவர் கி.வீரமணி:

ராஜிவ் கொலை வழக்கில் கைதாகியுள்ள 7 பேரை விடுவிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு ஆலோசனைக் கேட்டுள்ளதை அரசியல் லாபம் என்றோ, உள்நோக்கம் என்றோ ஆராயத்தேவை இல்லை. 7 பேரின் விடுதலை தான் முக்கியம். அவர்களை விடுக்க மத்திய அரசு முன் வராவிட்டால் வீண்பழி ஏற்படும்.

மமக தலைவர் ஜவாஹிருல்லா:

பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் அபுதாஹிர் போன்ற 10 ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ம் பிரிவின் கீழ் தமிழக அரசு விடுவிக்க வேண்டும்.

சமக தலைவர் சரத்குமார்:

7 பேரை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு உள்துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது. அவர்களை விடுதலை மத்திய அரசின் கையில் தான் உள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்:

தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இந்த முறையும் மத்திய அரசு அனுமதி வழங்காவிட்டால். அரசியல் அமைப்புச் சட்டத்தின் 161 பிரிவை பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தலைவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x