

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 13 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கூட்டணி மொத்தமாக வென்றுள்ளது. அதேபோல, 124 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 78 இடங்களில் வென்று 6 ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றாம்பள்ளி என 4 ஒன்றியங்களுக்கு கடந்த 6-ம் தேதி முதல்கட்டத் தேர்தலும், மாதனூர் மற்றும் ஆலங்காயம் ஒன்றியங்களுக்கு கடந்த 9-ம் தேதி 2-ம் கட்டத் தேர்தலும் நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் 6 இடங்களில் நேற்று காலை முதல் விடிய, விடிய எண்ணப்பட்டன. கந்திலி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஒன்றியங்களுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று நள்ளிரவு வரை வெளியிடப்பட்டன. மாதனூர், ஆலங்காயம் மற்றும் நாட்றாம்பள்ளி ஆகிய 3 ஒன்றியங்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன.
தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் 3,438 அரசு அலுவலர்கள் ஈடுபட்டாலும், அவர்களுக்குப் போதுமான பயிற்சிகள் அளிக்கப்படாததால் பல இடங்களில் வாக்கு எண்ணும் பணிகள் மந்தமாகவே நடைபெற்றன. 6 மையங்களிலும் வாக்கு எண்ணும் அரசு அலுவலர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் சரியாகச் செய்து தரப்படாததால் பெண் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாவட்ட கவுன்சிலர்கள் விவரம், ஒன்றிய கவுன்சிலர்கள் விவரம், கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் ஆகியோரின் முழு தகவல்களை அதிகாரபூர்வமாக வெளியிட மாவட்டத் தேர்தல் பிரிவு அலுவலர்கள் காலதாமதப்படுத்தியதால் வெற்றி, தோல்வி பெற்றவர்களின் விவரம் தெரியாமல் பொதுமக்கள் பரிதவித்தனர்.
6 ஒன்றியத்தில் கந்திலி ஒன்றியத்தை தவிர மற்ற 5 ஒன்றியங்களில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளதால் அக்கட்சியைச் சேர்ந்தவர்களே ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் துணைத்தலைவராக மறைமுகத் தேர்தலில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கந்திலி ஒன்றியத்தில் திமுக 10 வார்டுகளையும், அதிமுக, பாஜக கூட்டணி 9 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளது. 3 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளதால் அவர்களில் ஆதரவு யாருக்கு என்பது பொறுத்து கந்திலி ஒன்றியத்தை திமுக அல்லது அதிமுக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவைச் சேர்ந்தவர்களே கந்திலி ஒன்றியத்தைக் கைப்பற்றத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.