

உளுந்தூர்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட கிளியூர் ஊராட்சி மன்றத் தேர்தலில் 1300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவரைத் தவிர்த்துவிட்டு 600 வாக்குகள் பெற்ற மற்றொரு வேட்பாளர் வெற்றிபெற்றதாக உளுந்துர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன் அறிவித்தார்.
அதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து 1300 வாக்குகள் பெற்ற அலமேலு என்பவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்குகள் எண்ணும் பணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் கிளியூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அலமேலு என்பவர் 1300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், கொளஞ்சி என்ற பெண் வெற்றிபெற்றதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன் அறிவித்தார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த அலமேலு, மீண்டும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றபோது, அவரை சந்திக்க சீனுவாசன் மறுத்துள்ளார்.
இதையடுத்து இன்று காலை கிராம மக்களுடன் உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் வந்த அலமேலு, கண்ணீர் மல்க சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு உறுதுணையாக கிராம மக்களும் சுமார் 2 மணி நேரம் போராட, போலீஸார் தலையிட்டு சமாதானம் செய்ய முயற்சித்தும் அவர்கள் சமரசம் அடையவில்லை. இதையடுத்து, தான் தூக்கக் கலக்கத்தில் தவறுதலாக வாக்கு எண்ணிக்கையைப் படித்துவிட்டதால், தவறு நேர்ந்துவிட்டதாகவும், அலமேலு வெற்றி பெற்றதாக அறிவிப்பதாகவும் கூறி, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கியுள்ளார் சீனுவாசன்.
இந்தத் தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று சங்கராபுரத்தில் வடகீரனூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 381 வாக்குகள் பெற்ற பஷீர் என்பவர் வெற்றிபெற்ற நிலையில், 378 வாக்குகள் பெற்ற இதயத்துல்லா என்பவரை வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார் தேர்தல் நடத்தும் அலுவலர். இதனால் பஷீரின் ஆதரவாளர்கள் சங்கராபுரம் வட்டரா வளர்ச்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்வராயன்மலையில் வஞ்சிக்குழி ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்ட மகேஸ்வரி 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், சின்னக்கண்ணு என்பவரை வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார். இதை எதிர்த்து மகேஸ்வரி கள்ளக்குறிச்சி ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் பெற உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசனைத் தொடர்புகொண்ட போது அவர் பேச முன்வரவில்லை.