Last Updated : 13 Oct, 2021 04:31 PM

 

Published : 13 Oct 2021 04:31 PM
Last Updated : 13 Oct 2021 04:31 PM

திருப்பத்தூரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நிரம்பிவழியும் ஆண்டியப்பனூர் அணை.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் ஆண்டியப்பனூர் அணை 7-வது முறையாக முழுக் கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதையடுத்து, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டியப்பனூர் அணையின் நீர் நிலையை ஆட்சியர் அமர் குஷ்வாஹா இன்று ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. வேலூர் மாவட்டத்தில், காட்பாடி, மேல் ஆலத்தூர், பொன்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம், ஆம்பூர், வடபுதுப்பட்டு, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும், ஜவ்வாதுமலைத் தொடரிலும் கனமழை கொட்டியது.

ஜவ்வாது மலையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஆண்டியப்பனூர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை விடாமல் பெய்த கனமழையால் ஆண்டியப்பனூர் அணை நேற்று நள்ளிரவு 11.25 மணியளவில் முழுக் கொள்ளளவை எட்டியது. அணையின் மொத்தக் கொள்ளளவு 112.200 மில்லியன் கன அடியாகும். 8 மீட்டர் உயரம் கொண்டதாகும்.

நிரம்பி வழியும் ஆண்டியப்பனூர் அணை

தொடர் மழையால் அணை முழுக் கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறியது. விநாடிக்கு 123.88 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நிரம்பி அதிலிருந்து வெளியேறி வரும் தண்ணீர் அருகேயுள்ள மடவாளம் ஏரி, செலந்தம்பள்ளி ஏரி, எகிலேரி வழியாக பாம்பாற்றுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

ஆண்டியப்பனூர் அணை நிரம்பி வழிவதால் அணையைச் சுற்றியுள்ள குரிசிலாப்பட்டு, மாடப்பள்ளி, குறும்பேரி, கோனேரிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், அங்கு சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் வசதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை 7-வது முறையாக நிரம்பியுள்ளதாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆட்சியர் ஆய்வு

அணை நிரம்பியதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆண்டியப்பனூர் அணை பகுதியில் இன்று நீர்நிலை குறித்து ஆய்வு செய்தார்.

அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் தண்ணீரால் கரையோர மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைககளை எடுக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஆட்சியர் ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதேபோல, தமிழக-ஆந்திர எல்லைப் பகுதிகளிலும் நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் பாலாற்றுப் பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வாணியம்பாடி, கொடையாஞ்சி, ஆவாரங்குப்பம், ஆம்பூர், மாதனூர், பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாலாற்றுக் கரையை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலாற்றில் ஓடும் தண்ணீரை வேடிக்கை பார்க்கவோ, குளிக்கவோ இளைஞர்கள், சிறுவர்கள் என யாரும் பாலாற்றுப் பகுதிக்கு வரவேண்டாம் என உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாகப் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்:

வேலூர் மாவட்டம்: குடியாத்தம் 19.60 மி.மீ., காட்பாடி 40.20 மி.மீ., மேல் ஆலத்தூர் 59.20 மி.மீ., பொன்னை 15.80 மி.மீ., வேலூர் 9.60 மி.மீ., வடபுதுப்பட்டு 1.40 மி.மீ. என மொத்தம் 145.80 மி.மீ.மழையளவு பதிவாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம்: ஆலங்காயம் 38 மி.மீ., ஆம்பூர் 19.40 மி.மீ., வடபுதுப்பட்டு 17.60 மி.மீ., நாட்றாம்பள்ளி 4.20 மி.மீ., கேத்தாண்டப்பட்டி 5.0 மி.மீ., வாணியம்பாடி 24.00 மி.மீ., திருப்பத்தூர் 6.30 மி.மீ., என மொத்தம் 145.80 மி.மீ.மழையளவு பதிவானது.

ராணிப்பேட்டை மாவட்டம்: வாலாஜா 11.1 மி.மீ., ஆற்காடு 3.00 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x