புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்: 4 மாதம் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்: 4 மாதம் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு
Updated on
2 min read

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போக வாய்ப்புள்ளது. நான்கு மாதங்கள் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்துள்ளது.

புதுச்சேரியில் இதுவரை இரு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.

2006-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் 2011 வரை பொறுப்பில் இருந்தனர். அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை. உச்ச நீதிமன்றம் தலையிட்டு, அக்டோபருக்குள் தேர்தல் நடத்தி முடிவுகளை அறிவிக்கும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி செப்டம்பர் 22-ம் தேதி முதலில் அறிவிக்கப்பட்டது.

இட ஒதுக்கீடு குளறுபடிகளைக் களைய சென்னை உயர் நீதிமன்றத்தில் சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார் உள்ளிட்டோரால் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த 29-ம் தேதி உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைத்து, வார்டு குளறுபடிகளைச் சரிசெய்ய உத்தரவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டை அரசு திரும்பப் பெற்றது.

இது அரசியல் கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இட ஒதுக்கீடு இல்லாமல் தேர்தலை நடத்தக் கூடாது என வலியுறுத்தினர். இருப்பினும் மாநிலத் தேர்தல் ஆணையம் 2-வது முறையாக உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்தது.

இதையடுத்து திமுக மாநில அமைப்பாளர் சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இட ஒதுக்கீடு வழங்கி, தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கடந்த 11-ம் தேதி வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலை 21-ம் தேதி வரை தள்ளிவைத்தது. இதனால் அன்றைய தினம் தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் புதுவை மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் சார்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முரண்பாடு உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், வேட்புமனுத் தாக்கலை நிறுத்தி வைத்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீற முடியாது என உயர் நீதிமன்றம் கடந்த 1-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலையால் புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் வட்டாரங்களில் விசாரித்தபோது, "உயர் நீதிமன்றத்தில் புதுவை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 4 பேர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இவை அனைத்தும் வரும் 21-ம் தேதி தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வருகிறது. மாநில அரசும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தகவல்களைத் தாக்கல் செய்ய உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் புதுவை மாநிலத் தேர்தல் ஆணையம் கோரியுள்ளபடி கால அவகாசம் அளிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது" என்று குறிப்பிட்டனர்.

இதனால் புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in