

கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த கடலூர் எம்.பி. ரமேஷ் இன்று (செப்.13) கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சிபிசிஐடி போலீஸார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி பிரபாகர் உத்தரவிட்டார்.
கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் மேலமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு (55) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 19-ம் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸார் மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையை நடத்தி வந்தனர். இதுகுறித்துப் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் பனிக்கன்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்த கோவிந்தராசுவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை சிபிசிஐடி போலீஸாருக்குத் தரப்பட்டது. அதில் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்து. இதனையடுத்து கடந்த 8-ம் தேதி எம்.பி. ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து 9-ம் தேதி அதிகாலை எம்பி. ரமேஷின் முந்திரி தொழிற்சாலையில் பணியில் இருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த அல்லாப்பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், கந்தவேல், வினோத், எம்.பி.யின் உதவியாளராக இருக்கும் நடராஜன் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இது கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி எம்.பி. ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிபதி அவரை 2 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் கடலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அங்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று (அக்.13) காலை அவர் கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில் சிபிசிஐடி போலீஸார் அவரைக் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தில் மனு அளித்தனர். மனுவை ஏற்ற நீதிபதி பிரபாகர், சிபிசிஐடி போலீஸார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.பி. ரமேஷை அழைத்துச் சென்றனர்.