Published : 13 Oct 2021 12:30 PM
Last Updated : 13 Oct 2021 12:30 PM

ஊரக உள்ளாட்சித் தேர்தல்; மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி வெற்றி: கே.எஸ். அழகிரி

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

“9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் வழங்கிய வெற்றியை விட அமோக ஆதரவுடன் உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். 74 ஊராட்சி ஒன்றியங்களில் 73-லும், 140 மாவட்ட ஊராட்சிகளில் 138-லும் மகத்தான வெற்றி திமுக தலைமையிலான கூட்டணிக்குக் கிடைத்திருக்கிறது. அதேபோல, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் இக்கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

கடந்த ஐந்து மாதங்களாகத் தமிழகத்தில் நடைபெற்று வருகிற முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு நற்சான்றிதழை இத்தேர்தல் வெற்றி மூலம் மக்கள் வழங்கியிருக்கிறார்கள். தமிழக அரசு நிறைவேற்றுகிற திட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாகப் பயனாளிகளுக்கு முழுமையாகச் சேருவதற்கு இந்த வெற்றி உறுதுணையாக இருக்கும்.

மக்கள் பங்கேற்கிற ஜனநாயக அமைப்பாக இருக்கிற ஊரக உள்ளாட்சிப் பொறுப்புகளில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அதே நேரத்தில், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்குப் படுதோல்வியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதேபோல, சந்தர்ப்பவாத கூட்டணியாகச் செயல்படுகிற பாஜகவுக்கும், பாமகவுக்கும் மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலமாக தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் தடையின்றிப் பயணம் செய்வதற்கான வாய்ப்பு அருமையாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்கிற பணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுவார் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x