

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊராட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 90 வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்றத் தலைவரானது உள்ளிட்ட சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்துள்ளன.
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சில் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சில்களில் பெரும்பான்மை இடங்களை ஆளும் திமுக கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள் ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது.
இந்த இருகட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 74 மையங் களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
90 வயது ஊராட்சி மன்றத் தலைவர்:
பாளையங்கோட்டை யூனியன் சிவந்திபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் 90 வயது நிரம்பிய மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார். பெருமாத்தாள் 1,558 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட செல்வராணி, உமா ஆகியோர் டெபாசிட் இழந்தனர். வெற்றி பெற்ற பெருமாத்தாள் தனது முதுமை மிளிரும் சிரிப்புடன் வெற்றிச் சான்றிதழைப் பெற்றுச் சென்றார். அவருக்கு கூடியிருந்த அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர்.
21 வயதில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி:
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 21 வயது பெண் சாருலதா என்பவர் வெற்றி பெற்றார். இவர், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் சிறுமருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றார். தேர்தலில், கடல்மணி, கன்னியம்மாள் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். கன்னியம்மாள் 423 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கடல்மணி 424 வாக்குகளும் பெற்றனர். இதில் கடல்மணி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
செல்லாமல் போன 310 வாக்குகள்:
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் 310 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. பதிவான 341 தபால் வாக்குகளில் 310 வாக்குகள் செல்லாது என தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். உரிய அதிகாரிகளிடம் கையெழுத்து பெறாததால் அவை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.