Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை முதல்வர் தடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வை தடுத்து நிறுத்தி,நியாயமான கட்டணம் வசூலிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

அக்.14-ம் தேதி (வியாழன்) ஆயுதபூஜை, 15-ம் தேதி (வெள்ளி) விஜயதசமி வருகிறது. அடுத்தடுத்த நாட்களான சனி, ஞாயிறு விடுமுறை நாட்களைத் தொடர்ந்து 19-ம் தேதி (செவ்வாய்) மிலாடி நபி பண்டிகை வருகிறது. இதையொட்டி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றுவோர் அரசு, தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த சூழலில், தனியார் நிறுவனங்கள் பேருந்துகளை வெவ்வேறு வழித்தடங்களில் இயங்குகின்றன. இப்பேருந்துகளில் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாககுளிர்சாதன வசதியுடன் கூடிய சென்னை - கோவை வழித்தடத்துக்கான கட்டணம் ரூ.2.800 வரை வசூலிக்கப்படுகிறது. சென்னை -கோவை விமானக் கட்டணம் ரூ.3,100 என்று இருக்க,பேருந்து கட்டணம் ரூ.2,800 வரை வசூலிக்கப்படுவதாகவும், அரசு தரப்பில் எச்சரித்தும், விதிமீறல்கள் தொடர்வதாகவும், அதிகாரிகளுக்கு தெரிந்தே இது நடப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

சம்பிரதாயத்துக்காக எச்சரித்துவிட்டு, இதை அரசு கண்டும், காணாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதில் ஆளும் கட்சியினருக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் ரகசிய தொடர்பு இருக்கிறதோ என்று எண்ணக்கூடிய அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே முதல்வர் தனி கவனம்செலுத்தி, தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அபரிமிதமான கட்டண உயர்வை தடுத்து நிறுத்துவதுடன், நியாயமான கட்டணம் வசூலிக்க வழிவகை செய்ய காவல்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x