

பாளையங்கோட்டை அருகே அடுத்தடுத்து தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவங்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி ஜெகஜோதி நகரைச் சேர்ந்த அய்யாத்துரை என்ற பீர்மைதீன் (55), மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி வேலம்மாள். இவர்களது மகன் கோதர் (23). வேலம்மாளுக்கும், ஸ்ரீவைகுண்டம் கால்வாயைச் சேர்ந்த சிவன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து சிவனுடன் வேலம்மாள் சென்றுவிட்டார். இருவரும் கன்னியாகுமரியில் குடியிருந்து வந்தனர்.
பீர்மைதீனுக்கும், சிவனுக்கும் இடையே நேற்றுமுன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற பீர்மைதீன் திரும்பி வரவில்லை. அங்குள்ள கல்வெட்டான்குழியில் மர்மமான முறையில் அவர் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சிவந்திப்பட்டி போலீஸார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கோதரை, மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். சம்பவ இடத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டார்.
பதற்றத்தால் போலீஸ் குவிப்பு
இக்கொலை தொடர்பாக செய்துங்கநல்லூர் போலீஸில் சிவன் உள்ளிட்ட இருவர் நேற்று சரணடைந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை, மகன் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதால் கிருஷ்ணாபுரம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.