Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு: குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மனு

ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை நேற்று சந்தித்துப் பேசினார். குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட எம்பிக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர்.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, தமிழக பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா, சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது ஆளுநரிடம் அண்ணாமலை அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மின்வெட்டு, சட்ட விரோத கனிமக் கொள்ளை என்று 2006 -2011 திமுக ஆட்சியில் நடைபெற்றவை மீண்டும் நிகழத் தொடங்கியுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு முன்பு வெற்றிமாறன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

கடலூர் தொகுதி திமுக எம்பியான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் கொலை வழக்கில் சரண் அடைந்துள்ளார். திருநெல்வேலி தொகுதி திமுக எம்பி ஞானதிரவியம், பாஜக நிர்வாகி ஒருவரை கடுமையாகத் தாக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்திய திமுகஎம்பியை கைது செய்யாமல், இந்த விவகாரத்தில் நீதி கேட்டுப் போராடிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

எனவே, இந்த விவகாரங்களில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். குறிப்பாக குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இரு திமுக எம்பிக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுகள் குறித்து ஆளுநரிடம் எடுத்துக் கூறினோம். நாங்கள் கூறியதைப் பொறுமையாக கேட்டுக் கொண்ட ஆளுநர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x