

சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 39 கிரவுண்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான இந்த இடத்தை, இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வுசெய்தார். தொடர்ந்து, அமைச்சர்முன்னிலையில் ஆக்கிரமிப்பாளர் களிடமிருந்து அதிகாரிகள் நிலத்தை மீட்டனர்.
பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை பலர் வாடகை செலுத்தாமல், பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். முறையாக வாடகை செலுத்தாத நபர்களிடமிருந்து இதுவரை 132 கிரவுண்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது. தற்போது தனியார் அறக்கட்டளை ஆக்கிரமித்திருந்த 31 கிரவுண்ட் நிலம் உட்பட 39 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.250 கோடி. கோயிலுக்கு வருவாய் தரக்கூடிய வகையில் இந்த இடம் பயன்படுத்தப்படும்.
பக்தர்களின் குறைகளைக் களைவதற்காக `குறைகள் பதிவேடு' துறை தொடங்கப்பட் டுள்ளது. இணையதளம் மூலம் குறைகளைத் தெரிவிக்க கடினமாக இருந்ததால், தொலைபேசி எண்ணை அறிவித்தோம். அதன் மூலம் இதுவரை 4,500 புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகார்களை மண்டல வாரியாகப் பிரித்து, உரிய தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக நிர்வாகி எச்.ராஜாவின் விமர்சனங்களை அறநிலையத் துறை பொருட்படுத்தாது. அவர் மத்திய அரசின் பிரதிநிதி அல்ல.
சிறுவாபுரி முருகன் கோயிலில்செவ்வாய்க்கிழமை பக்தர்கள்வழிபட அனுமதி வழங்கப்பட் டுள்ளது. விஜயதசமியன்று கோயில்களைத் திறப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருநீர்மலையில் ரோப் கார்அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. பணிகள்முடிந்தவுடன், பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை மண்டல உதவி ஆணையர் கவேனிதா உடனிருந்தனர்.