Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

ஸ்ரீபெரும்புதூர் கோவிந்த யதிராஜ ஜீயருக்கு கோயில் செயல் அலுவலர் நோட்டீஸ்: சமூக வலைதளங்களில் பரவும் தகவலால் சர்ச்சை

சென்னை

ஸ்ரீபெரும்புதூர் கோவிந்த யதிராஜ ஜீயருக்கு, ஆதிகேசவப் பெருமாள் - பாஷ்யக்கார சுவாமி கோயில் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவிவருவது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் - பாஷ்யக்கார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் ராமானுஜர் அவதார ஸ்தலமாகும். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஸ்ரீபெரும்புதூர் கோவிந்த யதிராஜ ஜீயர் சுவாமி இரண்டாம் தீர்த்தகாரராக உள்ளார்.

இந்த சூழலில், பூஜை முறைகளில் முறையாக பங்கேற்ப தில்லை என்று கூறி கோவிந்த யதிராஜ ஜீயருக்கு கோயிலின் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.

இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் - பாஷ்யக்கார சுவாமிகோயிலில் நடைபெறும் பூஜைமுறைகளில் இரண்டாம் தீர்த்தகாரர் என்ற வகையில் கோவிந்தயதிராஜ ஜீயர் தவறாமல் கலந்துகொண்டு மரியாதையை ஏற்க வேண்டும். அவரால் பங்கேற்க முடியாத சூழல் வரும்போது நாலாயிர திவ்யபிரபந்தம் உள்ளிட்டவற்றை அறிந்த தகுதியான குமாஸ்தா ஒருவரை நியமித்து தனக்கு பதிலாக அவர் பூஜை முறைகளில் கலந்து கொள்வார் என்று கடிதம் அளிக்க வேண்டும். அந்த கடிதத்தை கோயில் நிர்வாகம் அங்கீகரித்த பிறகு, பூஜை முறைகளில் ஜீயருக்கு பதிலாக குமாஸ்தா பங்கேற்கலாம்.

ஆனால் இந்த விதிகளை பின்பற்றாமல், கோயிலில் பணியாற்றும் ஊழியரையே குமாஸ்தாவாக கோவிந்த யதிராஜ ஜீயர் நியமித்துள்ளார். இது சட்டப்படி தவறு. அந்த குமாஸ்தாவும் பூஜை முறைகளில் முறையாக கலந்துகொள்வதில்லை.

எனவேதான், பூஜை முறைகளில் கலந்துகொள்ளாமல் இருந்ததற்கான காரணம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க அவகாசம் தரப்பட்டுள்ளது. விதிப்படி, தகுதியான குமாஸ்தாவை நியமித்தால் கோயில் நிர்வாகத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதை ஏற்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இருப்பினும் இந்த விவகாரம் குறித்து முழுமையாக தெளிவு ஏற்படாததால் பக்தர்கள் மத்தியில் குழப்பமான நிலை உள்ளது. இதுகுறித்து ஜீயர் தரப்பின் கருத்தை அறிய தொடர்ந்து முயன்று வருகிறோம். அவரிடம் இருந்து இதுகுறித்து விளக்கம் கிடைத்தவுடன் விரிவாக வெளியிடுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x