Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் திமுக அபாரம்: மாவட்ட கவுன்சில் பதவியில் அனைத்து இடங்களையும் தக்க வைத்தது

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர்களுக்கான 17 உறுப்பினர் பதவிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. ஊராட்சி ஒன்றிய கவுன்சில் பதவியில் அக்கட்சியைச் சேர்ந்த 32 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 180 ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 412 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என 3,773 பதவியிடங்களுக்கு மொத்தம் 13,957 வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 224 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 2531 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.

கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 29 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 453 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் என மொத்தம் 487 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய பதவிகளுக்கு போட்டியாளர்களாக 10,715 பேர் களம் கண்டனர்.

இரு கட்டமாக நடைபெற்ற இத்தேர்தலில் மொத்தம் 9 லட்சத்து 64 ஆயிரத்து 778 வாக்காளர்களில், 7 லட்சத்து12ஆயிரத்து297 வாக்காளர் கள் தங்கள் வாக்கினை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் வேட்பாளர்கள், முகவர்களின் அடையாளம் கண்டு உள்ளே அனுப்ப தாமதம் ஏற்பட்டதால், 11 மணி அளவிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

நேற்று இரவு நிலவரப்படி, 17 மாவட்டக் கவுன்சிலர் பதவிகளில் அனைத்திலும் திமுக முன்னிலை வகிக்கிறது. ஊராட்சி ஒன்றியக் கவுன்சில் பொறுத்தவரை தியாகதுருகம்-7. ரிஷிவந்தியம்-7, சின்னசேலம்-3, சங்கராபுரம்-4, கல்வரையான்மலை-2, உளுந்தூர்பேட்டை-4 மற்றும் திருநாவலூர்-5 என 32 ஒன்றியக் கவுன்சில் பதவிகளில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி ஒன்றியங் களில் தலா 1 இடத்தில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x