Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

மதுரை தொழில் வளர்ச்சி அடைய ‘மாஸ்டர் பிளான்’ - அமைச்சர் பி.மூர்த்தி உறுதி

மதுரையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 97-வது ஆண்டு நிறைவு விழாவில் பேசினார் அமைச்சர் பி.மூர்த்தி. படம்: ஜி.மூர்த்தி

மதுரை

மதுரை தொழில் வளர்ச்சி அடைய மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும் என்று அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 97-வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் தலைமை வகித்தார். சு.வெங்கடேசன் எம்.பி., எம்எல்ஏக்கள் பூமிநாதன், வெங் கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:

மதுரை இதுவரை தொழில் வளர்ச்சி அடையவில்லை. ஆனால் கோவை, சேலம், திருச்சி ஆகிய நகரங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. மதுரையில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மாஸ்டர் பிளான் 2003-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் அதை செயல்படுத்த அதிகாரிகளும், அமைச்சர்களும் முன்வரவில்லை. தற்போது மதுரையில் 2 அமைச்சர்கள் உள்ளோம். நிச்சயமாக திமுக ஆட்சியில் மதுரையை இரண்டாவது தலைநகராக்க மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும். மதுரையைச்சுற்றி 15 கி.மீ. சுற்றளவில் தொழில் செய்வதற்கும், வீடு கட்டுவதற்கும் உகந்த பகுதியாக மாற்றும் வகையில் மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும். எங்களது ஆட்சிக் காலத்தில் மதுரை வளரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. வணிகர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும். வணிகர்களுக்கு சமாதானம் திட்டம் கொண்டு வரப்படும். ஆக்கப்பூர்வமான கருத்துகளை சொல்வதற்கு குழு அமைக்க உள்ளோம். நேர்மையாக வணி கம் செய்பவர்களுக்கு உற்ற நண்பனாக வணிக வரித் துறை இருக்கும். அரசுக்கு வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்கள் யாரும் தப்பிக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

சங்க செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x