

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
காரைக்குடி அருகே கோட்டையூரில் பொது சுகாதாரத்துறை சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத் தொடக்க விழா ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் மாங்குடி, தமிழரசி முன்னிலை வகித்தனர்.
திட்டத்தைத் தொடங்கிவைத்து அமைச்சர் பேசியதாவது: வரும் முன் காப்போம் திட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியாளர்கள் அத்திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. தற்போது மீண்டும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டம் மூலம் மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் தலா 3 மருத்துவ முகாம்கள் வீதம் 36 முகாம்கள் நடத்தப்படும், என்றார்.
மருத்துவ இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதாரத் துணை இயக்குநர் ராம்கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து கண்டவராயன்பட்டியில் முதியோர் இல்லத்தில் நடந்த முதியோர் தின விழாவில் பங்கேற்ற பின் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று, என்றார்.