Last Updated : 12 Oct, 2021 07:12 PM

 

Published : 12 Oct 2021 07:12 PM
Last Updated : 12 Oct 2021 07:12 PM

உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்கு பெற்ற பாஜக நிர்வாகி; அடுத்தமுறை வென்று கட்சிக்குப் பெருமை சேர்ப்பதாக உறுதி

தீ.கார்த்திக்.

கோவை

கோவை குருடம்பாளையம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, சுயேச்சையாகப் போட்டியிட்ட பாஜக நிர்வாகி, ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளார்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது குருடம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு உறுப்பினர் பதவி சமீபத்தில் காலியானது. இந்த வார்டில் மொத்தம் 1,551 வாக்காளர்கள் உள்ளனர். காலியாக உள்ள 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்குத் தகுந்த நபரை தேர்வு செய்ய, கடந்த 9-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக திறவுகோல் சின்னத்தில் ந.கந்தேஷ், சீப்பு சின்னத்தில் செ.ஜெயராசு, கட்டில் சின்னத்தில் ஆ.அருள்ராஜ், கார் சின்னத்தில் தீ.கார்த்திக், சங்கு சின்னத்தில் ப.வைத்தியலிங்கம், பெயின்ட் பிரஷ் சின்னத்தில் ப.ரவிக்குமார் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள வாக்காளர்களில் 913 பேர் தங்களது வாக்குகளை செலுத்தினர். வாக்குப்பதிவு முடிந்தவுடன், ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எடுத்துச் சென்று வைக்கப்பட்டன.

இன்று (12-ம் தேதி ) வாக்கு எண்ணிக்கை நடந்தது. காலை 8 மணிக்கு குருடம்பாளையம் ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டவர்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையத்தில் 4-க்கும் மேற்பட்ட மேஜைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு மேஜையிலும் சிறிய சிறிய பெட்டிகள் சின்னங்களுடன் வைக்கப்பட்டு இருந்தன. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், ஒவ்வொரு ஓட்டுச் சீட்டுகளையும் பிரித்து, முகவர்கள், வேட்பாளர்களின் முன்னிலையில் காட்டிவிட்டு, அங்கே வைக்கப்பட்டிருந்த வேட்பாளர்களுக்குரிய பிரத்யேகப் பெட்டியில் போட்டனர். சில மணி நேரங்களுக்கு பிறகு மதியம் 2 மணிக்கு இந்த வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை பணி நிறைவடைந்தது.

இதில் ஆ.அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக செ.ஜெயராசு 240 வாக்குகளும், ப.வைத்தியலிங்கம் 196 வாக்குகளும், ந.கந்தேஷ் 84 வாக்குகளும், ப.ரவிக்குமார் 2 வாக்குகளும், தீ.கார்த்திக் ஒரு வாக்கும் பெற்றுள்ளனர். இதில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற ஆ.அருள்ராஜ் திமுகவைச் சேர்ந்தவர் ஆவார்.

ஒரு வாக்கு பெற்ற தீ.கார்த்திக், கோவை பாஜக இளைஞரணியின் மாவட்ட துணைத் தலைவர் ஆவார். பாஜகவைச் சேர்ந்தவர், சுயேச்சையாகப் போட்டியிட்டு ஒரு வாக்கு பெற்ற தீ.கார்த்திக்கின் தேர்தல் முடிவு விவரங்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகின. தீ.கார்த்திக்கு அவரது கட்சியினர், குடும்பத்தினர் வாக்களிக்கவில்லை எனக் கருத்துகள் பரப்பப்பட்டன.

ஆனால், தீ.கார்த்திக் குருடம்பாளையம் ஊராட்சியின் 4-வது வார்டைச் சேர்ந்தவர் ஆவார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அந்த வார்டில்தான் ஓட்டுகள் உள்ளன. வார்டு மாறி, 9-வது வார்டில் தீ.கார்த்திக் போட்டியிட்டுள்ளார், மேலும், அதிமுக சார்பிலும் இங்கு ஒருவர் போட்டியிட்டதால் வாக்குகள் பிரிந்துவிட்டன, எனவே தீ.கார்த்திக்கு அங்கு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

இதுதொடர்பா தீ.கார்த்திக் கூறும்போது, ‘‘நான் 4-வது வார்டில் வசித்து வருகிறேன். இடைத்தேர்தல் வந்ததால் 9-வது வார்டில் போட்டியிட்டேன். என் குடும்பச் சூழல் காரணமாக சரிவர பிரச்சாரம் செய்ய முடியவில்லை. யாருக்கும் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என அறிமுகப்படுத்தவில்லை. இருப்பினும் ஒரு ஓட்டு கிடைத்துள்ளது. இதையே வெற்றியாக எடுத்துக் கொள்கிறேன். அடுத்த முறை 4-வது வார்டில் நின்று போட்டியிட்டு பெரிய வெற்றியைப் பெறுவேன். கட்சிக்குப் பெருமை சேர்ப்பேன்,’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x