

கோவையில் மூன்று இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) பிரிவு அதிகாரிகள் இன்று (12-ம் தேதி) சோதனை நடத்தினர்.
கோவை புலியகுளம் ஏரிமேட்டைச் சேர்ந்த தினேஷ் (36), பல் மருத்துவர். இவர், இடையர்பாளையத்தில் சிறிய அளவிலான மருத்துவமனையை நடத்தி வந்தார். இவர் மாவோயிஸ்ட் இயக்கத்தின் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில், கேரள மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார், கடந்த பிப்ரவரி மாதம் கோவையிலுள்ள தினேஷ் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்த மாவோயிஸ்ட் ஆதரவு தொடர்பான பல்வேறு ஆவணங்களை கேரள மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து தினேஷைக் கைது செய்த போலீஸார், கேரள மாநிலத்தில் உள்ள சிறையில் அடைத்தனர். முன்னதாக, தினேஷிடம் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியபோது, தினேஷுக்குத் தெரிந்த நபரான சுங்கம் காமராஜர் வீதியைச் சேர்ந்த டேனிஷ் (32) என்பவரும் மாவோயிஸ்ட் ஆதரவாளராகச் செயல்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கேரளாவில் பதுங்கியிருந்த டேனிஷையும் சில மாதங்களுக்கு முன்னர் தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அதேபோல், பொள்ளாச்சி அருகேயுள்ள அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும் மாவோயிஸ்ட் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. ஆனால், அவர் தலைமறைவாகி விட்டார். போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட் அமைப்பினருடன் தொடர்பில் இருக்கும் நபர்கள், ஆதரவாளர்களாக உள்ள நபர்கள் ஆகியோர்களின் வீடுகளில் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று (12-ம் தேதி) சோதனை நடத்தினர். மூன்று மாநிலங்களையும் சேர்த்து ஏறத்தாழ 23 இடங்களில் என்ஐஏ சோதனை நடந்தது. இதில், கோவை மாவட்டத்தில் புலியகுளத்தில் உள்ள தினேஷ் வீடு, காமராஜர் வீதியில் உள்ள டேனிஷ் வீடு, அங்கலக்குறிச்சியிலுள்ள சந்தோஷ் வீடு ஆகிய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் டிஎஸ்பி ராஜேஷ் தலைமையில் சோதனை நடத்தினர்.
மேற்கண்ட இடங்களில் காலை சுமார் 6 மணிக்கு என்ஐஏ அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சோதனை நடக்கும் வீடுகளின் முன்பு, போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இந்த சோதனை மாலை வரை நடந்தது. ஒவ்வொரு இடத்திலும் தலா 7 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மேற்கண்ட நபர்களின் வீடுகளில் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.