திருக்கோவிலூரில் வாக்குச்சீட்டுப் பெட்டியின் சாவி மாயம்: பூட்டை உடைத்து வாக்கு எண்ணிக்கை

திருக்கோவிலூரில் வாக்குச்சீட்டுப் பெட்டியின் சாவி மாயம்: பூட்டை உடைத்து வாக்கு எண்ணிக்கை
Updated on
1 min read

திருக்கோவிலூர் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டிருந்த தபால் வாக்குப் பெட்டியின் சாவி மாயமானதால் அதைத் திறக்க முடியாமல் அவதிப்பட்ட தேர்தல் அலுவலர்கள், பின்னர் வேறு வழியின்றி பூட்டை உடைத்து, வாக்குச் சீட்டுகளை எடுத்து எண்ணினர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 9 ஒன்றியங்களிலும் இன்று நடைபெற்றது. அதன்படி திருக்கோவிலூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி திருக்கோவிலூர் தனியார் பள்ளியில் நடைபெற்றது. வாக்கு எண்ணும் மையத்திற்குச் செல்ல அதிகாலையிலேயே அலுவலர்கள் உள்ளே சென்றுவிட, 6 மணிக்குப் பின் வேட்பாளர்களையும், முகவர்களையும் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பும் பணி தொடங்கியது.

வாக்கு எண்ணும் மையத்தில் நுழைய நீண்ட வரிசையில் நின்ற வேட்பாளர்கள், முகவர்கள்.
வாக்கு எண்ணும் மையத்தில் நுழைய நீண்ட வரிசையில் நின்ற வேட்பாளர்கள், முகவர்கள்.

வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளே நுழையும் அனுமதிச் சீட்டுடன் வந்தபோதிலும், அவற்றைப் பரிசோதித்தும், முகவர்களைப் பரிசோதிக்கவும் நேரமானதால், வாக்கு எண்ணும் மையத்தில் செல்வதற்கான வரிசை நீண்டது. சுமார் 200 மீட்டர் தூரம் முகவர்கள் வரிசையில் நின்றிருந்ததைக் காண முடிந்தது.

அசதியால் தூங்கிய அலுவலர்கள்

வாக்கு எண்ணிக்கை தொடங்கினாலும், ஒவ்வொரு சுற்றுக்குமான இடைவெளி அதிகரித்ததால் வாக்கு எண்ணும் அலுவலர்கள் அசதியால் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது சிலர் கூறும்போது, ''நேற்று இரவே இங்கு வந்துவிட்டோம். இரவும் தூக்கமில்லை. காலையிலேயே பணி தொடங்கிவிட்டது. வேறு வழியில்லை மிகவும் அசதியாக இருக்கிறது. கூடுதல் அலுவலர்களை நியமித்தால் ஒருவருக்கொருவர் மாறி மாறிப் பணி செய்யலாம்'' என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in