

வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என, சென்னை உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 6 மற்றும் 9-ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.12) நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறி, வாக்கு எண்ணிக்கை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, திரிசூலம் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கும், வார்டு உறுப்பினர் பதவிக்கும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிட்ட சரஸ்வதி, சத்தியநாராயணன், முத்துக்கனி ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்கு எண்ணிக்கை ஏற்கெனவே தொடங்கி விட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், மாநிலத் தேர்தல் ஆணையம், சட்டப்படி உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புவதாகக் கூறி, மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்க மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
இதேபோல, வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யக் கோரிய வழக்குகளிலும் மாநிலத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.