

டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரம் அடைந்து இருப்பதால், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது 4 மாதத்துக்குப் பின்னர் முதல் முறையாக நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கன அடி வீதம் காவிரியில் நீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து, ஜூன் 12-ம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டு வந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு இன்று அதிகாலை வரை, விநாடிக்கு 1,000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வளிமண்டலச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணை நீர் தற்போது தேவையில்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறக்கப்படுவது இன்று (அக். 12) காலை 8 மணி முதல் நிறுத்தப்பட்டது. மாறாக, காவிரிக் கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 100 கன அடி வீதம் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையிலிருந்து மேட்டூர் கால்வாய் பாசனத்துக்குத் திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 750 கன அடியில் இருந்து 650 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
இதனிடையே, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று விநாடிக்கு 15,479 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று விநாடிக்கு 19,068 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நேற்று 81.47 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று 82.92 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 43.43 டிஎம்சியில் இருந்து, இன்று 44.92 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.