

சுற்றுலா பேருந்துகள் அகில இந்திய அளவில் இயக்க அனுமதி பெற்றிருந்தாலும் தமிழகத்துக்குள் இயக்க தனியாக வரி செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியார் சுற்றுலா பேருந்து உரிமையாளர்களான திருமூர்த்தி, தமிழ்செல்வி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், ‘‘படுக்கை வசதி கொண்ட சுற்றுலா பேருந்துகளை இயக்கி வருகிறோம். இந்த பேருந்துகளை நாகலாந்து மற்றும் புதுச்சேரியில் பதிவு செய்துள்ளோம். மோட்டார் வாகனச் சட்டபடி பேருந்துகளை இந்தியா முழுவதும் இயக்குவதற்கு அனுமதி பெற்றுள்ளோம். ஆனால் எங்களது பேருந்து புதுச்சேரியில் இருந்து கோவைக்கு சென்றபோது கடலூர் மோட்டார்வாகன ஆய்வாளர் சட்டவிரோதமாக பேருந்தை முடக்கியுள்ளார். எனவே அந்த வாகனத்தை மீண்டும் இயக்கத்துக்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும்’’ என கோரி யிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், எந்தவொரு நிபந்தனையும் மீறப்படவில்லை என்றும், அகில இந்திய அளவில்உரிமம் பெற்றுள்ளதால் தமிழ்நாடுமோட்டார் வாகனவரி சட்டத்தின் கீழ் தமிழகத்தில் அந்த வாகனத்தைஇயக்க எந்த வரியும் செலுத்த தேவையில்லை என்றும், அவ்வாறுசெலுத்தினால் அது இரட்டை வரி விதிப்பாகி விடும் என வாதிடப் பட்டது.
தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் நஸ்ருதீன் ஆஜராகி, ‘‘தமிழ்நாடு மோட்டார் வாகனவரி விதிகளின்படி தமிழகத்தில் பேருந்துகளை இயக்கும்போது உரிய வரி செலுத்த வேண்டும். அகில இந்திய உரிமம் பெற்று வெளி மாநிலத்தில் பதிவு செய்தவாகனத்துக்கு தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டப்படி உரிய வரிசெலுத்த வேண்டும்’’ என வாதிட் டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘மத்திய அரசுகொண்டு வந்துள்ள புதிய விதிகளின்படி, மாநில அரசுகள் வரி விதிக்கும் சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்ளவில்லை. எனவே மாநில அரசுக்கான வரியை கண்டிப்பாக செலுத்தித்தான் ஆக வேண்டும். இதில் எந்தவொரு சட்ட விரோதமும் இல்லை. மனுதாரர்கள் கண்டிப்பாக உரிய வரியைசெலுத்தி பேருந்தை மீட்கலாம்’’ என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.